மாடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாப உயிரிழப்பு .. திருச்சி அருகே சோகம்
திருச்சி அருகே பள்ளி அருகே தனியார் வணிக வளாக கட்டிட மாடி தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம், லால்குடி பெண்கள் மேனிலைப் பள்ளி எதிரே தனியார் வணிக வளாகம் மாடிக் கட்டிடம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த கட்டிடம், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்ற போது அணுகு சாலை அமைத்தனர். அப்போது இந்த வணிக வளாக கட்டிடம் முன் பகுதி இடத்தினை அணுகு சாலைக்காக அரசு கையகப்படுத்தி முன் பகுதி கட்டிடங்களை இடித்தனர்.
இடித்த கட்டிடங்களை சரி செய்த கட்டிட உரிமையாளர் தரை தளத்தில் 5 கடைகளும், முதல் தளத்தில் 5 கடைகளும் என நகை அடகுகடை, மெடிக்கல், கிப்ட்ஷாப், புத்தகக்கடை என 10 கடைகள் இயங்கி வந்தன. கட்டடத்தின் மாடி மேற்பகுதியில் பகுதியில் தடுப்பு சுவர் ஹாலோ பிளாக் கல்லில் தரமற்ற முறையில் கட்டியுள்ளனர். தற்போது ஆடி மாதத்தில் கடுமையான காற்று வீசியதில் மாடி மேல் கட்டிய தடுப்பு சுவர் முற்றிலுமாக இடிந்து தரையில் விழுந்தது.
இதில் லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாஸ், மகன் எபினேசர் (10). என்ற 5 ஆம் வகுப்பு மாணவனும் அதே பகுதி சேர்ந்த கனகராஜ் மகன் சஞ்சய் (12) ஆகியோர் அவ்வழியாக சைக்கிளில் சென்றபோது சுவர் இடிந்து விழுந்ததில் இரு சைக்கிள்களும் நொருங்கியது. மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். அதே போல் தனது தாயாருடன் நடந்து வந்த பிளஸ் 2 மாணவி நிஷாந்தி மற்றும் மருந்தகத்தில் செய்த கவிதா (24) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த நால்வரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மாணவன் எபினேசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து கட்டிட உரிமையாளர் மீது லால்குடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.