\
Toshisuke Kanazawa
Toshisuke Kanazawareuters

90 வயதில் அசுர ஃபிட்னஸ்.. சவால் விடும் டேஞ்சர் தாத்தா! மிரண்டு போகும் இளைஞர்கள்!

90 வயதிலும் இளைஞர்களுக்கு இணையாக பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
Published on: 
Summary

90 வயதிலும் பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கும் ஜப்பானைச் சேர்ந்த தோஷிசுகே கனசாவா, இளைஞர்களுக்கே சவால் விடும் ஃபிட்னஸ் மாடலாக திகழ்கிறார்.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

பொதுவாக வயதாக வயதாக உடல் வலிமை குறையும், தசைகள் பலவீனமடையும், உடற்பயிற்சி செய்வதுகூட சவாலாக மாறும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால், 90 வயதிலும் இளைஞர்களுக்கு இணையாக பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர். அப்படி என்னதான் செய்கிறார் இந்த 90 வயது நபர்? அவரது ஃபிட்னஸ் ரகசியம் என்ன? பார்க்கலாம்.

body builders
body buildersreuters

ஜப்பானைச் சேர்ந்த 90 வயது பாடிபில்டர் தோஷிசுகே கனசாவா (Toshisuke Kanazawa) தான் இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் இந்த டேஞ்சர் தாத்தா! 1936ஆம் ஆண்டு பிறந்த இவர், இளம் வயதில் சிறந்த நீச்சல் வீரராகத் திகழ்ந்திருக்கிறார். தசைப் பிரச்னை காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற அவரது கனவு தடைபடவே, அவரது கவனம் பாடிபில்டிங் மீது திரும்பியுள்ளது.

இதற்காகத் தனது 20 வயதில் பாடிபில்டிங் பயிற்சியைத் தொடங்கிய கனசாவா, தனது 24 வயதில் ஜப்பானின் 'மிஸ்டர் ஜப்பான்' பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதித்த இவர், தனது 34 வயதில் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றிருக்கிறார். பின்னர், மீண்டும் தனது 50 வயதில் பாடிபில்டிங் களத்திற்குத் திரும்பிய இவர், 80 வயதைக் கடந்த பிறகும் உலக மாஸ்டர்ஸ் பாடிபில்டிங் போட்டிகளில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இவரது சாதனைப் பயணம் 90 வயதிலும் தொடர்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜப்பான் மாஸ்டர்ஸ் பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பங்கேற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் தனது 19ஆவது தேசிய சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.

body builders
body buildersreuters

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச பாடிபில்டிங் போட்டியிலும் 90 வயதில் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், தனது விடாமுயற்சியால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கனசாவா.

இப்படி 90 வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கனசாவா, வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதைத் தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்து வருகிறார். அதேநேரத்தில், வயதானவர்கள் அனைவரும் இவரைப் போலவே கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, மருத்துவ ஆலோசனையுடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே பாதுகாப்பானது.