ஆர்.கே.நகரில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் (04-12-2017) கடைசி நாள். அந்த நாளில் மட்டும் 101 பேர் மனு தாக்கல் செய்த நிலையில் மொத்தமாக 145 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர்.
வேட்புமனுக்கள் மீதான பரீசிலனை நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், சுயேச்சையாக போட்டியிடும் தினகரன் உள்ளிட்ட 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. விஷால், தீபா உள்ளிட்ட 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை கடைசிநாள் ஆகும். நாளை மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இறுதி வேட்பாளர் பட்டியலை பொறுத்து மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடைபெறுமா அல்லது வாக்கு சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெறுமா என்பது தெரியவரும். வாக்கு எண்ணிக்கை 24 ஆம் தேதியும் நடைபெறுகிறது.