கன்னியாகுமரி: வறுமையால் உதவி கேட்ட சிறுமி- பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்கள்..!
கன்னியாகுமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 கொடூரன்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள கோழிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் 8 வயது மகளுடன் வாடகை வீட்டில் அவர் வசித்து வருகிறார். கொரோனா பொதுமுடக்கத்தால் இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இன்றி தவித்த அவர், மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மகளை பராமரிப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதனால் அவரது 8 வயது மகள் தெருவில் உள்ள அக்கம் பக்கத்தினரின் வீடுகளுக்கு உதவி கேட்டு சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அந்த சிறுமி தனது தந்தையிடம் தான் உதவிக் கேட்டுச் சென்ற வீடுகளில் உள்ள நபர்கள் தனக்கு உதவி செய்ததோடு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, ஊரில் உள்ள முக்கிய நபர் மூலம் தனது மகள் புகார் தெரிவிக்கும் வீடியோ ஆதாரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்யிடம் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க குளச்சல் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய குளச்சல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அந்த சிறுமி மற்றும் குடும்பத்தினரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் வறுமையை பயன்படுத்தி உதவி கேட்க செல்லும்போது பணம் கொடுத்ததோடு, சிறுமியிடம் சிலர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. தேங்காய்பட்டணம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் முகமது நூகு (75), ஸ்டூடியோ நடத்தி வரும் சகாய தாசன் (52), ஜாகீர் உசேன்(53), அப்துல் ஜாபர் (66) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதான இரண்டு சிறார்கள் என ஆறு பேர் பாலியல் தொந்தரவு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், ஆறு பேரையும் கைது செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் முதியவர்கள் நால்வரையும் மாவட்ட சிறையில் அடைத்த போலீசார், சிறுவர்கள் இருவரையும் நெல்லை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.