தமிழகத்தில் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள்: புதிய பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி தமிழகத்தில் மொத்தமாக 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3 கோடியே ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 370பேர் ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603 பேர் பெண் வாக்காளர்கள், 6 ஆயிரத்து 385பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 6 லட்சத்து 55 ஆயிரத்து 366 வாக்காளர்கள் உள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் குறைந்தபட்சமாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 107 வாக்காளர்கள் உள்ளனர்.தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்துகொள்ள நவம்பர் மாதம் 21, 22ஆம் தேதிகளிலும், டிசம்பர் மாதம் 12, 13ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.