50 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிக்கப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
50 ஆண்டுகள் பழமையான கட்டடங்களில் பழுது ஏற்பட்டிருந்தால் ஆய்வு நடத்தி இடிக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை அருகே பொறையாரில் கடந்த 20-ஆம் தேதி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். விபத்துக்குள்ளான போக்குவரத்து தொழிலாளர் பணிமனை, பழைய கட்டடம் என்பதால் தான் விபத்து ஏற்பட்டுவிட்டதுதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். அதேபோல நாகை தீயணைப்பு
நிலையத்தில் அதிகாரிகள் தங்கும் பழைய கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்களில் பழுது ஏற்பட்டிருந்தால் ஆய்வு நடத்தி இடிக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் இதனை அவர் தெரிவித்தார். மேலும், பழமையான அரசு கட்டடத்தில் உள்ள பணியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும், அங்கு ஆய்வு நடத்தப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.