அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு - மேற்குவங்க பாஜக தேர்தல்அறிக்கையில் வாக்குறுதி
மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அக்கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
8 கட்டங்களாக நடைபெறவுள்ள மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தலைசிறந்த வங்காளத்தை மீண்டும் உருவாக்குவதே , தேர்தல் அறிக்கையில் நோக்கம் என்றார். மகளிருக்கு ஆரம்பக் கல்வி முதல், முதுகலைக் கல்வி வரை இலவசம் என்றும், அவர்கள் பொதுப் போக்குவரத்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டத் தொடரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் எனவும், 70 ஆண்டுகளாக அகதிகளாக வசிப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஒருவருக்கு வேலை என்றும் , விவசாயிகளைப் போன்று, மீனவர்களுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

