அடுத்தடுத்து மர்மமாக இறக்கும் யானைகள் : கோவை வனப்பகுதியில் அசாதாரணம்..!

அடுத்தடுத்து மர்மமாக இறக்கும் யானைகள் : கோவை வனப்பகுதியில் அசாதாரணம்..!
அடுத்தடுத்து மர்மமாக இறக்கும் யானைகள் : கோவை வனப்பகுதியில் அசாதாரணம்..!

கோவை வனக்கோட்டத்தில் அடுத்தடுத்து யானைகள் இறக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள கோவை வனக்கோட்டதில் மட்டும் சுமார் 700-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அண்மைக்காலமாக இப்பகுதிகளில் யானைகளின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சட்டவிரோத மின்சார வேலி, அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடி, ரசாயன கழிவுகளால் மாசடைந்த குட்டை நீர், உணவுப் பொருளில் விஷம் வைத்தல், தந்ததிற்காக வேட்டை என பல்வேறு காரணங்களினால் யானைகளின் இறப்பு விகிதம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோவையில் கடந்த நான்காண்டுகளில் அவுட்டுக்காயால் வாய் சிதறி 6 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் கோவை வன கோட்டத்தில் எட்டு யானைகள் இறந்துள்ளன.

குறிப்பாக யானைகள் அதிகம் நடமாடும் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சமீபத்தில் சுருக்கு வைத்து ஒரு சிறுத்தை இறந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் மூன்று யானைகளும் அடுத்தடுத்து பலியாகியுள்ளன. இறந்த யானைகள் இறப்பு பற்றி செய்தியாளர்கள் உள்பட யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், தங்களுக்குச் சாதகமானவர்களை மட்டும் அருகில் வைத்துக் கொண்டு இறந்த யானையை உடற்கூராய்வு நடத்தி அங்கேயே புதைத்து விட்டதாக வனத்துறையினர் கூறுகின்றனர். உடல் நலக்குறைவே யானையின் இறப்பிற்குக் காரணம் எனக் கூறி உண்மை நிலையை வனத்துறையினர் மறைப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இறந்த யானைக்கு உடல்நலக்குறைவு என்றால், எதனால் யானைகளுக்கு நோய் ஏற்பட்டது ? யானைகளைக் காக்க ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன ? என்ற எந்தவொரு தகவலும் வெளியிடப்படுவதில்லை. கோவை வனக்கோட்ட பகுதியில் வேட்டைகள் அதிகரித்து வரும் சூழலில், யானைகளின் தொடர் மரணங்களைத் தடுக்கவும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இறந்த யானைகளின் உடலோடு உண்மைகளும் சேர்த்தே காட்டுக்குள் புதைக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. யானைகள் மட்டுமின்றி புலிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் என இப்பகுதியில் கொல்லப்படும் வன உயிரினங்கள் அதிகம் எனக் கூறும் இயற்கை நல ஆர்வலர்கள், இதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை என வலியுறுத்துகின்றனர். இதனை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com