எட்டு தலைமுறையாக பூட்டப்படாத 220 ஆண்டுகள் பழமையான வீடு...!

எட்டு தலைமுறையாக பூட்டப்படாத 220 ஆண்டுகள் பழமையான வீடு...!
எட்டு தலைமுறையாக பூட்டப்படாத 220 ஆண்டுகள் பழமையான வீடு...!

220 ஆண்டுகளாக பூட்டப்படாத கதவுடன் கூடிய வீட்டில் எட்டு தலைமுறையாக வாழ்ந்து வரும் குடும்பத்தினர். 


தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் 7 கிலோமீட்டர் தொலைவில் காவிரி கிளை ஆறான குடமுருட்டி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள நடுக்காவேரி கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர்.


இந்த கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்டுள்ளன. தற்போது இங்குள்ள பல வீடுகள் சேதமடைந்ததால் அதனை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் ஒருசில வீடுகள் மட்டுமே பழமையோடு நிமிர்ந்து நிற்கின்றன.


இதில் 1898 ஆம் ஆண்டு புண்ணாக்கு என்ற பெண்மணியால் கட்டப்பட்ட வீடுதான் யோகபுலி நாட்டார் பரம்பரை வீடு. சுண்ணாம்பு காரைகொண்டு இரண்டு அடி அகலத்தில் சுட்ட கல்லால் கட்டப்பட்ட இந்த வீடு முன்புறம் பின்புறம் என இரண்டு முக்கிய நிலைகளை கொண்டுள்ளது.


இந்த வீட்டில் கடந்த 220 ஆண்டுகள், எட்டு தலைமுறையாக ஒன்றாக வாழ்ந்து வரும் மக்கள், தங்கள் முன்னோர்கள் எப்படி இந்த வீட்டை வைத்திருந்தார்களோ அப்படியே இன்னும் பராமரித்து வருகின்றனர். காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த வீட்டினுள் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் வரலாம் என்ற எச்சரிக்கையோடு எட்டடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.


இந்த வீட்டின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் வீட்டில் உள்ள யாரும் வீட்டை காலி செய்துவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியே சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்திலும், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என்ற எதிர்பார்ப்போடு முன்புறம் மற்றும் பின்புறமுள்ள கதவுக்கு தாழ்ப்பாள் போடுவதே இல்லை.


இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், தங்கள் முன்னோர்கள் வசித்த வீட்டில் எதற்காக கதவுகளுக்கு தாழ்ப்பாள் இல்லாமல் கட்டினார்களோ அதேபோல இதுவரை தாழ்ப்பாள் இல்லாமல் அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.


அந்த வீட்டில் வசித்த பல தலைமுறையினர் சென்னை, பெங்களூர் வெளிநாடு என வேலைக்கு சென்று விட்ட போதிலும் அந்த வாரிசுகளில் எவரேனும் ஒருவர் அங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த பழமையான வீட்டினுள் நெல் கொட்டும் குதிர், உரல் உலக்கை, பெரிய அளவிலான கருங்கல்லால் ஆன ஆட்டுக்கல் அம்மிக்கல் போன்ற பழமையாக பொருட்கள் இன்றும் உள்ளன.


மேலும் இந்த வீட்டை யாரும் பாகப்பிரிவினை செய்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் ஒருபுறத்தில் படுக்கைஅறையும் மறுபுறத்தில் சமையலறையும் அமைத்துள்ளதாக கூறுகின்றனர். பெண்மணிகள் ஒரே குடும்பமாக ஒற்றுமையோடு வாழும் இந்தவீடு பழமையை பறைசாற்றும் வரலாற்று நிஜமாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com