அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்
அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேரை நியமித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் தோழமைக் கட்சியினர் எனக் கூறிக்கொண்டு ஊடகங்களில் சிலர் கூறி வரும் கருத்துகள் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அண்மையில் தெரிவித்திருந்தனர். மேலும், ஊடகங்களில் நடைபெறும் விவாதத்தில் அதிமுக சார்பில் கலந்து கொள்வதற்காக புதிய குழு விரைவில் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்தக் குழுவில் இடம்பெறுபவர்கள் மட்டுமே ஊடகங்களில் நடத்தப்படும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று அரசின் நிலைப்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேரை நியமித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் ஆகியோர் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜேசிடி.பிரபாகர், மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவை செல்வராஜ், சமரசம், பேராசிரியர் தீரன், ஏ.எஸ்.மகேஸ்வரி, பாபு முருகவேல், முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி ஆகியோரும் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர வேறு யாரும் அதிமுக சார்பில் ஊடகங்களில் பேசுவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தோழமைக் கட்சிகளின் சார்பில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவகர் அலி மட்டுமே ஊடக விவாதங்களில் பங்கேற்பார் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.