அருப்புக்கோட்டை: கண்மாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
அருப்புக்கோட்டை அருகே ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரின் மூத்த மகன் சந்தோஷ். அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்படாததால் நேற்று மாலை வெளியே விளையாடிவிட்டு வருவதாக கூறி சென்ற சந்தோஷ் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் தேடி உள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் சந்தோஷ் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள கண்மாயில் சிறுவன் சடலமாக மிதப்பதை கண்ட ஊர்மக்கள் அருப்புக்கோட்டை காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் சந்தோஷின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குளிக்க சென்ற போது சிறுவன் சந்தோஷ் கண்மாயில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.