திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தேசிய, மாநில கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில்
தற்போது வரை அதிமுக- பாமக இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7
மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சி மொத்தமாக 15 மக்களவை தொகுதிகளை கேட்டதாக சொல்லப்படும் நிலையில், தமிழகத்தில் 9 தொகுதிகளையும்,
புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் ஒதுக்க திமுக தலைமை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுகுறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை தவிர மதிமுக, விடுதலை
சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.