‘ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது’
ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது, பொதுச்செயலாளர் பதவியே கிடையாது, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவும், சேர்க்கவும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு தடை விதிக்காதது நமக்கு கிடைத்த முதல் வெற்றி என்று குறிப்பிட்டார். பிரிந்த இயக்கம் ஒன்று சேர்ந்ததாக வரலாறு இல்லை என்றும், நாம் ஒன்று சேர்ந்துள்ளோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இனி யார் வந்தாலும் நம்மை பிரிக்க முடியாது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

