பெண்களுக்கு வாய்ப்பளிப்பதில் 'நாம் தமிழர் கட்சி' முதலிடம்: பின்தங்கிய திராவிட கட்சிகள்!

பெண்களுக்கு வாய்ப்பளிப்பதில் 'நாம் தமிழர் கட்சி' முதலிடம்: பின்தங்கிய திராவிட கட்சிகள்!
பெண்களுக்கு வாய்ப்பளிப்பதில் 'நாம் தமிழர் கட்சி' முதலிடம்: பின்தங்கிய திராவிட கட்சிகள்!

தமிழக தேர்தல் களத்தில் சம எண்ணிக்கையில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது நாம் தமிழர் கட்சிதான். மொத்தமிருக்கும் 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளை காட்டிலும், மாற்று அரசியல் பேசும் கட்சிகள்தான் அதிக எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். தலைவர்களின் தொடர் பரப்புரைகளால் தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டி இருக்கிறது. பெண்களுக்காக அதை செய்வோம், இதை செய்வோம் என மாறி மாறி அரசியல் கட்சி தலைவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர், பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இவர்களில் எத்தனை பேர் தங்கள் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர் என பார்த்தால் மாற்று அரசியல் பேசும் கட்சியினரே முதலிடத்தை பிடிக்கின்றனர்.

தமிழக தேர்தல் களத்தில் சம எண்ணிக்கையில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது நாம் தமிழர் கட்சிதான். மொத்தமிருக்கும் 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது. இவர்களுக்கு அடுத்த இடத்தில் அமமுக, தேமுதிக கூட்டணி இருக்கிறது. அதில் அமமுக 16 பெண்கள், தேமுதிக 7 பெண்கள், எஸ்டிபிஐ ஒன்று என மொத்தம் 24 பெண் வேட்பாளர்களை களமிறக்கியிருக்கின்றது. மூன்றாவது இடத்தில் மக்கள் நீதி மய்யம், ஐஜேகே கூட்டணி இருக்கிறது. அதில், மக்கள் நீதி மய்யத்தில் 11 பேர் , ஐகேகேவில் 8 பேர் , சமத்துவ மக்கள் கட்சியில் இருவர் என 21 பெண்கள் தேர்தலைச் சந்திக்கிறார்கள்.

முதல் 3 இடங்களையும் இந்தக் கட்சிகள் பிடித்துவிட, உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகிதம், 50 சதவிகிதம் எனப் போட்டி போட்டுக்கொண்டு பெண்களுக்கு இடஒதுக்கீடு அறிவித்த திராவிடக் கட்சிகள், சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் ஒதுக்கீட்டில் கடைசி இரு இடங்களைப் பங்கிட்டுக்கொள்கின்றன.

அதிமுக 14 பெண்கள், பாஜக 2, பாமக ஒன்று என மொத்தம் அதிமுக கூட்டணி 17 பெண் வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறது. திமுக கூட்டணியில் திமுக தரப்பில் 11 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் ஒருவர் என 12 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.

ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமிருக்கும் தமிழகத்தில், வேட்பாளர்கள் பட்டியலில் மிகக் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள். ஆனாலும், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மெள்ள உயர்ந்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com