உதயமானது ‘எடப்பாடியார் நகர்’ : குடியிருப்பு பகுதிக்கு பெயர் சூட்டல்
ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு முதலமைச்சரின் சாதனைகளை நினைவுகூறும் வகையில் ‘எடப்பாடியார் நகர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த தோப்புபாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை நினைவுகொள்ளும் வகையில் அந்த குடியிருப்பு பகுதிக்கு ‘எடப்பாடியார் நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார்.
புதிய குடியிருப்பு அமைக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு நீண்ட காலமாக குடிநீர் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கொடிவேரி ஆற்று நீரை அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் வகையில் செய்துள்ளதாக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் கூறினார். இதேபோல அப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தையும் முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.