“மீண்டும் என்னை ஒபிஎஸ் சந்திக்க விரும்பியதையும் ஒப்புக்கொள்ள வைப்பேன்” - தினகரன் அதிரடி
ஓ.பன்னீர்செல்வம் என்னை ரகசியமாக வந்து சந்தித்தது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிடிவி தினகரனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும், மீண்டும் சந்திக்க நேரம் கேட்டதாகவும் தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். அவரது கருத்தை அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் உறுதிப்படுத்தினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும், அப்போது, தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என்றும், அதற்காக மன்னிப்புக்கேட்டார் என்றும், டிடிவி தினகரன் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தினகரன், கடந்த மாத இறுதியில் இரண்டாவது முறையாகவும் தன்னை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து, தினகரன் கூறியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று விளக்கம் அளித்தார். கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி இணைப்புக்கு முன்பாக தினகரனை சந்தித்தது உண்மைதான் என்று கூறிய அவர், அரசியல் நாகரீகம் கருதி அதனை வெளியே சொல்லவில்லை என்று கூறினார். அதிமுக இரு அணிகள் இணைப்புக்கு பின்னர் தினகரனுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒபிஎஸ் அளித்த விளக்கம் குறித்து தினகரன் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மீண்டும் என்னை பார்க்க விரும்புவதாக அதே நண்பர் ஒருவர் மூலம் ஓ.பி.எஸ் தூது அனுப்பியதால் பழைய சந்திப்பு குறித்து வெளியே கூற வேண்டிய நிலை வந்தது. முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என ஓ.பி.எஸ் முயற்சி செய்கிறார். பன்னீர்செல்வம் துரோக சிந்தனை உள்ளவர், ஏதாவது செய்து முதல்வராக வேண்டுமென இருக்கிறார்.
திமுகவையும், காங்கிரஸையும் எதிர்த்து அமைச்சர்கள் கண்டனக் கூட்டம் போட்டார்கள். தினகரன் ஒரு பொருட்டல்ல என கூறும் அமைச்சர்கள் அனைத்து மேடைகளிலும் என்னை எதிர்த்து பேசுவது ஏன்?. எங்கள் குடும்பத்தை ஒதுக்க நினைத்த ஓபிஎஸ் என்னை சந்தித்தது ஏன்?. கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகச் சொன்னவர், எதற்காக என்னை சந்திக்க வேண்டும்.
கடந்தாண்டு என்னை சந்தித்ததை ஓபிஎஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார். என்னிடம் அதற்கான ஆதரங்கள் இல்லை என்றாலும் அதை ஒப்புக் கொண்டுள்ளார். ஏனென்றால் அதற்கு சில சூட்சமங்கள் இருக்கு. அதை பிறகு தெரிவிப்பேன். அதேபோல், சமீபத்தில் தூதுவிட்டதையும் விரைவில் அவரே ஒப்புக் கொள்வார். இல்லையென்றால் ஒப்புக் கொள்ள வைப்பேன். ஒபிஎஸ் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் என்று தேவையே இல்லாமல் கூறியிருக்கிறார். நான் அவரை நல்ல குடும்பத்தில் பிறக்காதவர் என்றா சொன்னேன். ஆனால் இப்போது சொல்கிறேன். அவரது நடவடிக்கைகள் எதுவும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் செய்வதை போன்று இல்லை” என்றார்.