‘சோனியா குடும்பம் வசீகரத்தை இழந்துவிட்டது’ - சிவராஜ் சௌகான்
காங்கிரஸ் கட்சி இன்னும் தவறுகளிலிருந்து பாடம் கற்கவில்லை என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சௌகான் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி அப்பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேடும் பணியில் அக்கட்சியினர் தீவிரமாக இருந்தனர். இதனையடுத்து நேற்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய பிரதேச பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சௌகான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சி ஜனநாயக முறையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தையே சார்ந்திருக்கிறது. அந்தக் குடும்பமும் தற்போது வசீகர தன்மையை இழந்துள்ளது. அத்துடன் குடும்ப அரசியல் மற்றும் ஜாதி அரசியல் செய்யும் கட்சிகள் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தோற்று வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இடங்களில் தோற்று கொண்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.