''வேலை இல்லாதவர்கள் மீம்ஸ் உருவாக்குகிறார்கள்'' : அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்
வேலைவெட்டி இல்லாத கும்பல் தான் அமைச்சர்களை பற்றி மீம்ஸ் தயாரிப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் தெரிவித்தார். தான் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பின்னர் அதை குறித்து நிறைய மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். அதே போல் தான் பேசிய கருத்தை வைத்து எப்படியெல்லாம் கிண்டல் செய்யலாம், மீம்ஸ் போடலாம் என்று திமுகவும், டிடிவி தினகரனும் ஒரு குழுவை வைத்துக்கொண்டு செயல்படுவதாக அவர் கூறினார். ஜனநாயக நாட்டில் இது போன்று கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.