“வலிக்கிறது.. அமைதியா இருக்கமாட்டேன்” காங். மீது தேவ கவுடா பாய்ச்சல்
இனியும் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்று காங்கிரஸ் உடனான சிக்கல் குறித்து முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான தேவ கவுடா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 37 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க, மஜதவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியையும் அவர்களுக்கு காங்கிரஸ் கொடுத்தது.
கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கூட்டணி ஆட்சியில் தொடர்ச்சியாக சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மஜத சார்பில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால், காங்கிரஸ் தரப்பில் அமைச்சரவை அமைத்தது முதல் சமீப காலம் தொடர்ச்சியாக சிக்கல்கள் நிலவி வருகின்றன.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் கலந்து கொள்ளாமல் இருந்து, பின்னர் அவர்கள் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பிரச்னை ஓய்ந்து முடிவதற்குள், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சித்தராமையாதான் தங்கள் முதல்வர் என்று சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்து இருந்தனர். இது, முதல்வர் குமாரசாமியை மிகவும் கோபமடையச் செய்தது.
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், “இது என்னை பாதிக்காது, காங்கிரஸ் தலைவர்களுக்குதான் பிரச்னை. அவர்களது எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கு சித்தராமையாதான் முதல்வராக இருக்க வேண்டும் என்றால், நான் பதவி விலகவும் தயாராக இருக்கிறேன். அவர்கள் எல்லை மீறி செல்கிறார்கள்” என்று காட்டமாக கூறியிருந்தார். பின்னர், சித்தராமையா ஒருவழியாக பேசி சமாளித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் உடனான கூட்டணி உறவு குறித்து தேவ கவுடா மிகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “குமாரசாமி முதலமைச்சராகி 6 மாதங்கள் ஆகிவிட்டன. இத்தனை மாதங்களாக இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை நான் எவ்வித கருத்தினையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இதற்கு மேலும் என்னால் அமைதியாக இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் அநாகரிகமான வார்த்தைகளை பேசாதீர்கள் என கூட்டணி கட்சியினரை கேட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றார்.