“உ.பியில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கும்” - பிரியங்கா காந்தி
உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று அம்மாநிலத்தின் கிழுக்கு பகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதனால் இங்கு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடை பெற்று வருகிறது. தற்போது வரை நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 71 வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் அம்மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் யுக்தியை பிரியங்கா காந்தி தெளிவு படுத்தியுள்ளார். இது குறித்து அவர், “இம்முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பாஜகவின் வாக்குகளை பிரிப்பார்கள். ஏனென்றால் எந்தத் தொகுதியில் எல்லாம் எங்கள் வேட்பாளர்கள் பலமாக இருக்கிறார்களோ அங்கு அவர்கள் வெற்றி பெறுவார்கள். மற்ற இடங்களில் எங்கள் வேட்பாளர்கள் பாஜகவிற்கு வரும் வாக்குகளை பிரிப்பார்கள். இதனால் பாஜக இம்முறை உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களில் தோல்வியைத் தழுவும்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 71 இடங்களும், காங்கிரஸ் 2 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களும், அப்னா தளம் கட்சி 2 இடங்களும் வென்றிருந்தன. வரும் 6ஆம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி உள்ளிட தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.