கைகழுவுவதற்காக ஒவ்வொருவரும் 330 மில்லி தண்ணீரை வீணாக்குவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5 மில்லி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் சராசரியாக ஒவ்வொரு முறையும் கைகளை கழுவ 330 மில்லி தண்ணீரை வீணடிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் நடத்திய மாசு தடுப்புக் கூட்டத்தில், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூட்டு தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டு, இந்த பிரச்சனைகளை குறைப்பதற்கான வழிமுறைகளை விவாதித்தனர். அப்போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றுவதன் மூலம் 330 மில்லி தண்ணீர் எவ்வாறு வீணாகிறது என்றும், அதேபோல், தண்ணீரை பாட்டிலின் மூடியில் ஊற்றி கைகளை கழுவுவதன் மூலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் செய்முறையாக செய்து காண்பிக்கப்பட்டது.
தொழிற்சாலைகளால் வெளியிடப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் அதிகளவு மாசுபடுகிறது என்றும் நீரை வீணாக்காமல் தேவையான அளவு, சரியான முறையில் உபயோகப்படுத்துவதன் மூலமே அதை சேமிக்க முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது.