“கூகுளின் எதிர்காலம் யு டியூப்பில்தான் இருக்கும்” - சுந்தர் பிச்சை
கூகுளின் மொத்த வருமானத்தில் யு டியூப் முக்கிய பங்காற்றுவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணைய உலகத்திற்கு பெரும்பாலானோர் வந்துவிட்டனர். எத்தகைய சந்தேகங்களுக்கும் தீர்வை கொடுக்க கூகுள் தயாராக இருக்கிறது. அதேபோல வீட்டில் பிரியாணி எப்படி சமைக்கலாம் என்பதிலிருந்து மருத்துவக் குறிப்புகள் வரை வீடியோவாக யு டியூப் இணையத்தில் கிடைக்கிறது. யு டியூப் இணையதளமும் கூகுள் தயாரிப்புதான். சிறுவர்களுக்கு ஜாலியான விளையாட்டுகள், பெரியவர்கள் விரும்பி கேட்கும் பாடல்கள் என அனைத்து வசதிகளும் வீடியோவாக யு டியூப்பில் கிடைக்கின்றன. இதனால் நாளுக்கு நாள் யு டியூப் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கூகுள் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்தமாக 39.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய வருடம் இதே காலக்கணக்கில் பெற்ற வருவாயை விட 22 சதவீதம் அதிகம் ஆகும். இந்நிலையில் கூகுளின் மொத்த வருமானத்தில் யு டியூப் முக்கிய பங்காற்றுவதாக அதன் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வருங்காலத்திலும் இந்த நிலைமை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். யு டியூப் விதிமுறைகளை மீறும் வகையில் பதிவேற்றப்படும் வீடியோக்களை கண்டுபிடித்து நீக்குவதற்குதான் இந்தாண்டில் யு டியூப்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை மீதான நம்பிக்கை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம், கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்தில் எழுந்த பாலியல் புகாரும், அதற்கான சுந்தரின் நடவடிக்கைகளும்தான் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.