”ஏன் இப்படி நடக்குது? என் கைகள் நடுங்குகின்றன”-கூகுள் பணிநீக்கமும் கர்ப்பிணியின் வேதனையும்

”ஏன் இப்படி நடக்குது? என் கைகள் நடுங்குகின்றன”-கூகுள் பணிநீக்கமும் கர்ப்பிணியின் வேதனையும்
”ஏன் இப்படி நடக்குது? என் கைகள் நடுங்குகின்றன”-கூகுள் பணிநீக்கமும் கர்ப்பிணியின் வேதனையும்

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் ஊழியர்களில் 6% அதாவது 12,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர், ‘சிறப்பாக பணிபுரிந்த போதிலும் தான் நீக்கப்பட்டுள்ளேன்’ என்றுர் மனமுடைந்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் தனது பணியாளர்களில் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக கடந்த 20ஆம் தேதி அறிவித்தது. அதன்படி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், உலகம் முழுவதுமுள்ள மொத்த பணியாளர்களில் 6 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளது. பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சார்பில் சம்பந்தப்பட்ட 12,000 ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

அந்த மின்னஞ்சலில், “கூகுள் நிறுவனம் ஒரு கடினமான செய்தியை பகிர்ந்து கொள்கிறது, மொத்த பணியாளர்களில் 6% அதாவது 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக முடிவெடுத்திருக்கிறது. 25 வருட பழையான நிறுவனமான கூகுள், கடினமான பொருளாதார சுழற்சிகளை கடக்க வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கையானது நமது கவனத்தை கூர்மையாக்கவும், நமது செலவுத் தளத்தை மறுசீரமைக்கவும், நமது திறமை மற்றும் மூலதனத்தை உயர்வான இடத்திற்கு வழிநடத்தவும் முக்கியமானதாக எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து பல ஊழியர்கள் தங்களது மனநிலை என்ன என்பதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சக ஊழியர்களின் வேலை இழப்பை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் கூகுள் நிறுவன ஊழியர்கள், தாங்களும் எப்போது வேண்டுமானாலும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்கிற கவலையில் உள்ளனர். இந்த பணிநீக்கங்கள் என்பது செயல்திறன் அடிப்படையில் இல்லாமல், கட்டமைப்பு ரீதியாக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வேலைநீக்கம் குறித்து ஆல்பாபெட் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகத் தலைவர் பருல் கவுல் கூறுகையில், "கடந்த காலாண்டில் மட்டும் 17 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிய ஒரு நிறுவனம் இப்படியொரு மோசமான முடிவு எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். ஒரு மென்பொருள் பொறியாளர், "கூகுளில் எனது கடைசி நாளை 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எதிர்பாராத விதமாக மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொண்டேன் என்பதை நம்புவது எனக்கு கடினமாக உள்ளது. கன்னத்தில் அறைந்து வெளியே அனுப்பியதைப் போன்று உணர்கிறேன். எல்லோரும் நேருக்கு நேர் ஒருமுறை சந்தித்து விடைபெற்றுச் சென்றிருக்கலாமே எனத் தோன்றுகிறது" என்று தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனத்தில் புரோக்ராம் மேனேஜராக பணிபுரிந்த கேத்ரின் வோங்க் என்பவர், தான் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், பிரசவ கால விடுமுறைக்கு முன் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தான் சிறப்பாக வேலை செய்துள்ளாக ரிவியூ கொடுக்கப்பட்ட நிலையிலும், இது நடந்திருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து லிங்க்டுஇன் ஐடியில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “8 மாத கர்ப்பிணியாக இருக்கும் எனக்கு, இன்னும் ஒரு வாரத்தில் பிரசவ கால விடுமுறை எடுக்க வேண்டும் என்று டாக்டர் அறிவித்திருந்த போது, இந்த வேலை நீக்க செய்தி என் இதயத்தை நடுங்க செய்தது. அந்த 12,000 பேரில் என்பெயரும் இருந்தது, அதை முதலில் பார்க்கும் போது ஏன் இப்படி நடக்க வேண்டும்? எனக்கு ஏன் இப்போது நடக்க வேண்டும் என்று தான் தோன்றியது. அதும் இந்த நடவடிக்கை சிறந்த பணியாளர் என்ற மதிப்பாய்வு அளிக்கப்பட்ட நிலையில், வந்திருப்பது என்னை மேலும் காயப்படுத்தியது. 34 வார கால கர்ப்பிணி பெண் மீண்டும் வேலை தேடுவது என்பது முடியாத காரியம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அன்று நாள் முழுக்க எனக்கு குறுஞ்செய்திகளும், போன் கால்களும் வந்துகொண்டே இருந்தன. எல்லோரும் என் குழந்தை மற்றும் அதனூடே என் நல்வாழ்க்கை பற்றிய கவலையை வெளிப்படுத்தினார்கள். எனக்குள் ஒரு சிறு உயிர் இருப்பதால், என் எதிர்மறை உணர்ச்சிகளை நான் வெளிக்கொணர விரும்பவில்லை. ஆனால் என்னதான் என்னை நான் கண்ட்ரோலாக வைத்திருக்க நினைத்தாலும், நடுங்கும் என் கைகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று தன் வேதனையான மனநிலையை கூறியுள்ளார்.

என்னதான் மன வேதனையை வெளிப்படுத்தினாலும் இறுதியாக, “நான் தொடர்ந்து வேலை செய்ய விரும்புகிறேன். ஆனால் தற்போது எனக்கு என் குழந்தை தான் முக்கியம். மகப்பேறு காலத்தின் இறுதி தருணங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். குழந்தையை பாதுகாப்பாக பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நான் நன்றாக இருப்பேன், அது எனக்கு தெரியும். அதை அடைய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று மேலும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கு கூகுள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்திருக்கும் அவர், அதன் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com