பார்வேர்ட் இமேஜை நேரடியாக கூகுளில் தேடலாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி!
போலிச்செய்திகளை தடுக்க புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் தனது சோதனை தளமான பீட்டா வெர்சனில் கொண்டு வந்துள்ளது
வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது வாட்ஸ் அப் அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது. நாள்தோறும் தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் பரப்பப்படுவதாகவும், அவதூறுகள் பகிரப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து போலிச்செய்திகள் பரவுவதை தடுக்க மத்திய அரசும் வாட்ஸ் அப் நிறுவனத்தை கேட்டுக்கொண்டது. அதன்படி பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. அதிக பேருக்கு மெசேஜ் பார்வேர்டு செய்யப்படுவதை தடுக்க, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்ற வகையில் மாறுதல்களை கொண்டு வந்தது.
இந்நிலையில் போலிச்செய்திகளை தடுக்க புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் தனது சோதனை தளமான பீட்டா வெர்சனில் கொண்டு வந்துள்ளது. அதன்படி பார்வேர்டு செய்யப்படும் புகைப்படத்தை செர்ச் இமேஜ் (Search Image) ஆப்ஷன் மூலம் நேரடியாக கூகுளில் சென்று அதன் உண்மைத் தன்மையை ஆராயலாம். இந்த முறையால் போலிச்செய்திகள் ஓரளவுக்கு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ஆப்ஷன் தற்போது பீட்டா 2.19.73 என்ற பதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறை தற்போது சோதனை முயற்சியில் இருப்பதால் விரைவில் அனைத்து தளங்களிலும் அதிகாரப்பூர்வமாக கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.