மெசேஜ் கவனிக்கவில்லையென உறவுகளுடன் மோதல் வருகிறதா? இதோ தீர்வு.. வந்தாச்சு அசத்தல் Whatsapp Update!
வாட்ஸ்அப் செயலியானது தொடர்ந்து தங்களுடைய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் சமீபத்தில் ஸ்டிக்கர் பேக்குகளை அப்படியே நண்பர்களுக்கு ஷேர் செய்யும் வகையிலான அப்டேட்டை அறிமுகப்படுத்தியிருந்த வாட்ஸ்அப், தற்போது நம்முடைய சாட்களில் தவறவிடப்படும் மெசேஜ்கள் மற்றும் தவறவிடப்படும் ஸ்டேட்டஸ்கள் குறித்து நினைவூட்டும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
அதன்படி நூறு, ஆயிரக் கணக்கில் Contacts மற்றும் அதிகப்படியான குரூப்களில் இருக்கும் நபர்கள், பெரும்பாலான சாட்களையும், மெசேஜ்களையும் தவறவிட்டுவிட்டு உறவுகளுடன் மனஸ்தாபத்திற்கு உள்ளாவதை தற்போது தவிர்த்து கொள்ள முடியும்.
தவறவிட்ட மெசேஜ், ஸ்டேட்டஸை நினைவூட்டும் வாட்ஸ்அப்!
நமது வாட்ஸ்அப்பில் பல தொடர்பு எண்கள் மற்றும் குரூப்கள் இருக்கும்போது, அனைவரது மெசேஜ்களுக்கும் நம்மால் பதிலளிக்க முடியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி நம்மால் தவறவிடப்படும் மெசேஜ்கள் மட்டுமில்லாது தவறவிடப்படும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களையும் நினைவூட்டும் வகையில் Reminder-ல் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் செயல்படுத்தவிருக்கிறது.
ஏற்கனவே Unread சாட்ஸ் என்ற ஒரு டேப் வாடிக்கையாளர்களுக்கு இருந்தாலும், அதை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்துவதில்லை என்பதுதான் நிதர்சனம். அதனால் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் Remind செய்யும் அம்சத்தில் மெசேஜ்கள் மற்றும் ஸ்டேட்டஸ் இரண்டையும் இணைத்துள்ளது வாட்ஸ்அப்.
நீங்கள் நினைவூட்டல் அம்சத்தை பெறுவதற்கு Settings – Notifications – Reminders வழியாக சென்று உங்களால் ஆக்டிவேட் செய்துகொள்ள முடியும். இந்த அப்டேட்டானது WhatsApp பீட்டா பதிப்பு 2.24.25.29-ல் கிடைக்கிறது.
அதுமட்டுமில்லாமல் கூடுதலாக வாய்ஸ் நோட் மெசேஜ்களுக்கு இன்னும் விரைவாக பதிலளிக்கும் வகையில், மெசெஜ்ஜின் ரைட் சைடு கார்னரில் மைக் ஆப்சனை வாட்ஸ்அப் கொண்டுவர உள்ளது.
ஆக, இனி வரும் காலங்களில் பல உறவுச்சிக்கல்களை நம்மால் எளிதாக தவிர்க்க முடியும்!