கிளப்ஹவுஸில் புதிதாக 'மெசேஜிங்' வசதி அறிமுகம்: என்ன ஸ்பெஷல்?
சமூக வலைதள ஆடியோ சேவையாக கவனத்தை ஈர்த்திருக்கும் 'கிளப்ஹவுஸ்' செயலியில், பயனாளிகள் தகவல்களை எழுத்து வடிவில் பரிமாறிக்கொள்வதற்கான மெசேஜிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆடியோ அறைகளை உருவாக்கிக் கொண்டு, ஒலி வடிவில் உரையாட வழி செய்யும் கிளப்ஹவுஸ் செயலி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று பயனாளிகள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
சமூக ஆடியோ செயலியாக அறியப்படும் கிளப்ஹவுஸ் சேவை கடந்த சில மாதங்களாக இந்தியாவிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையத்தில் உரையாடல் மற்றும் விவாத வசதியை ஒலி வடிவில் சாத்தியமாக்கும் இதன் அரட்டை அறை வசதி பெரிதும் விரும்பப்படுகிறது.
கிளப்ஹவுஸ் செயலி பிரபலமாக இருந்தாலும், அதன் பிரைவசி மீறல் அம்சங்களுக்காக சர்ச்சைக்குறியதாகவும் இருக்கிறது. அதேநேரத்தில், ஆடியோ சேவை என்றாலும், பயனாளிகள் மெசேஜிங் மூலம் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட வழியில்லாதது இந்த சேவையின் முக்கிய விடுபடலாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், பயனாளிகளுக்கான மெசேஜிங் வசதியை 'பேக் சேனல்' எனும் பெயரில் கிளப்ஹவுஸ் அறிமுகம் செய்துள்ளது. பேக் சேனல் வசதி மூலம், கிளப்ஹவுஸ் பயனாளிகள் ஒருவருக்கு ஒருவர் செய்தி அனுப்பிக்கொள்ளலாம். குழு செய்திகளையும் அனுப்பலாம். இணைப்புகளையும் பகிரலாம் என்றாலும், புகைப்படம் அல்லது வீடியோவை பகிர முடியாது.
ஆடியோ உரையாடலை துவக்குவதற்கு முன் அல்லது உரையாடல் முடிந்த பின் ஒருங்கிணைப்பு மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கு இந்த வசதியை பயன்படுத்தலாம்.
கிளப்ஹவுஸ் செயலியில் பேச்சாளர்களிடம் கேள்வி கேட்க அல்லது அறையில் நுழைய அனுமதி கேட்கவும் இந்த வசதி உதவும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு அறிமுகம் ஆகியுள்ள இந்த அரட்டை வசதியை விமானம் ஐகான் மூலம் கண்டறியலாம்.
- சைபர் சிம்மன்