மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? ஃபேஸ்புக் இத்தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய என்ன காரணம்?

மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? ஃபேஸ்புக் இத்தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய என்ன காரணம்?

மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? ஃபேஸ்புக் இத்தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய என்ன காரணம்?
Published on
முகநூலுக்கு மெட்டா என பெயரை சூட்டியிருக்கிறார் மார்க் ஜூக்கர்பர்க். இதன் பின்னணியில் இருப்பது மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் உலகம். மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? பேஸ்புக் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் உலகமே நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் இணைய வசதியால் தொடர்பு கொள்ள முடிகிறது. நேரில் கண்டிராத ஒருவரை கூட சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாக்கி கொள்ள முடிகிறது. இந்த இணைய உலகின் அடுத்த கட்டம் தான் மெட்டா வெர்ஸ். META UNIVERSE என்ற வார்த்தைகளை இணைத்து உருவானதுதான் METAVERSE. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு என்பது தான் இதன் அர்த்தம்.
மெட்டாவெர்ஸ் என்ற பதம் முதன்முதலில் 1992ஆம் ஆண்டு நீல் ஸ்டீபன்சன் என்ற எழுத்தாளரின் Snow Crash என்ற அறிவியல் கதையில் வெளியானது. மக்கள் தங்களுக்கென அவதார்களை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் மெய்நிகர் உலகம் தான் மெட்டாவெர்ஸ் என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த மெட்டாவெர்ஸ் கோட்பாடு அடிப்படையில் உருவான மற்றொரு நாவல் தான் ரெடி பிளேயர் ஒன். இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இதனை 2018ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியிட்டிருந்தார். தற்போதுள்ள Roblox, Fortnite ஆகிய ஆன்லைன் வீடியோ கேம்களும் மெட்டாவெர்ஸ் அடிப்படையில் உருவானவையே. நாம் இருக்கும் சூழலை கற்பனை சூழலாக மாற்றும் ஆக்மெண்ட் ரியாலிட்டி, அந்த கற்பனை சூழலில் நாமே இருப்பதாக உணரச் செய்யும் விர்ச்சுவல் ரியாலிட்டி. இந்த இரண்டையும் இணைத்து நிஜ உலக மனிதர்களை விர்ச்சுவலாக வாழ செய்யும் இடம் தான் மெடாவெர்ஸ்.
தற்போது ஆன்லைன் விளையாட்டுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் இனி,மக்களை தங்களுக்கு பிடித்தமான தோற்றம் கொண்ட அவதார்களை உருவாக்கி மெய்நிகர் உலகில் வாழச் செய்ய போகிறது. கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணத்தை கொண்டு விர்ச்சுவல் நிலங்களை வாங்கி நமக்கு பிடித்தமான சூழலை உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். தற்போது பேஸ்புக் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தில் தான் கவனம் செலுத்துகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் விர்ச்சுவல் விளையாட்டு தளமான ஆக்யூலஸ் ஆகியவற்றை மெட்டாவெர்ஸ் மூலம் இணைத்து புதிய தாய் நிறுவனத்தின் கீழ் கொண்டு வருவது மார்க் ஜூக்கர்பர்கின் திட்டம். இது சாத்தியப்பட 15 வருடங்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.
இப்போது பேஸ்புக் மூலம் நாம் இதுவரை நேரில் கண்டிராதவர்களுடன் கூட நட்பு பாராட்டுகிறோம் , இந்த தொழில்நுட்பம் சாத்தியப்படும் போது மெய்நிகர் உலகில் அந்த நண்பர்களோடு நாம் விளையாடலாம் இசை நிகழ்ச்சிக்கு செல்லலாம். ஆனால் இது மனிதர்களுக்கு இடையிலான நேரடி தகவல் தொடர்பை ரத்து செய்து மனிதர்களை மேலும் தனிமைப்படுத்தும் என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com