`வேலைகள் தொடங்கியாச்சு... 2030-க்குள் இந்தியாவில் 6ஜி கொண்டு வருவோம்!’- பிரதமர் மோடி தகவல்

`வேலைகள் தொடங்கியாச்சு... 2030-க்குள் இந்தியாவில் 6ஜி கொண்டு வருவோம்!’- பிரதமர் மோடி தகவல்
`வேலைகள் தொடங்கியாச்சு... 2030-க்குள் இந்தியாவில் 6ஜி கொண்டு வருவோம்!’- பிரதமர் மோடி தகவல்

வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 6 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமூக பிரச்னைகள், அரசு நிர்வாகம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க, மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிகழ்ச்சியாக 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' நிகழ்ச்சியை மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட மையங்களிலிருந்து 75 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' தொடக்க விழாவில், மத்திய கல்வி இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தரும் பெரம்பலூர் எம். பி.யுமான பாரிவேந்தர் வாழ்த்துரை வழங்கினார். காணொளிக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆராய்ச்சியும் புத்தாக்கமும் வாழ்வியல் முறைகளாக மாற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி பேசுகையில், “நாட்டில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. ஏற்கெனவே விவசாயம் மற்றும் சுகாதாரத்துறையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் நாட்டில் கேமிங் மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படும் இளைஞர் குழுவை நாங்கள் ஆதரிக்கிறோம். 2030-க்குள் 6 ஜி சேவை நாட்டில் உருவாகும்” என்றார்.

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 6ஜி சேவைக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி சேவை தொடங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது தொழில்நுட்ப ரீதியாக கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com