2027-ல் மனித குலத்துக்கு ஆபத்து! “கொரோனாவை விட நிலைமை மோசமாகும்”... எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்
இன்னும் சில நாட்களில் உயிரிழப்புகள், மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படப் போகிறது என எச்சரிக்கை விடுத்து, ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் விஷயம் இப்போது கவனம் பெற்றிருக்கிறது.
பருவநிலை மாற்றம், எல்-நினோ தாக்கம், போர், பதற்றமான சூழல், திடீர் தாக்குதல்கள், வறுமை, பஞ்சம் இவற்றால் ஏற்கெனவே உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று நாம் அன்றாடம் எளிதாக பயன்படுத்தி வரக்கூடிய ஒரு விஷயம், மக்கள் உயிர் பறிக்கும் ஆயுதமாக மாறப் போகிறது என ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஆம், அது செயற்கை நுண்ணறிவு தான். ஏஐயின் வருகைக்குப் பிறகு பல விஷயங்கள் முன்னேறியிருக்கின்றன. ஏஐ பயன்படுத்தாத துறைகளே இல்லை என்ற அளவில், அனைத்து துறைகளிலும் இது புரட்சி செய்திருக்கிறது. ஆனால், ஏஐ தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த, பிரபலமான பொறியாளர்கள், ஆய்வாளர்கள் ஏஐ குறித்த எச்சரிக்கைகளை பட்டியலிட்டு அடுத்தடுத்து பணியில் இருந்து விலகியபோது தான், ஏஐ குறித்த அச்சம் உலகளவில் இணையம் வாயிலாக பரவ ஆரம்பித்தது.
ஏஐ ஆபத்தானது தான் என்ற வார்த்தைகள் அந்த நிறுவன தலைவர்கள் வாயிலிருந்தே வெளிப்பட்டபோது பிரச்னையின் தன்மை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில், ஏஐ உயிரிழப்புகளைக் கூட ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருப்பது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. செயற்கை நுண்ணறிவின் கடுமையான அபாயங்களை சோதனை செய்யக் கூடிய non-profit நிறுவனமான METR-அமைப்பில் பணியாற்றக் கூடிய என்ற ஆராய்ச்சியாளர் தான் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருக்கக் கூடிய நிக்கோலா, “அடுத்த நாள் வரை நாம் உயிருடன் இருப்போமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. இதுவரை ஏஐ-யால் ஏற்பட்ட சேதங்கள் பெரும்பாலும் நிதி சார்ந்தது. ஆனால், அடுத்த ஆண்டு ஏஐ மிகப்பெரிய பாதிப்பையும், பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். ஒரு ஏஐ கட்டுப்பாட்டை மீறி முக்கிய உள்கட்டமைப்புகளுக்குள் ஊடுருவலாம். உயிரியல் ஆயுதங்களை உருவாக்க ஏஐ பயன்படுத்தப்படலாம். அல்லது உலகின் முக்கிய தலைவர்கள் இயந்திரங்களுக்கு அதிகப்படியான அதிகாரத்தை வழங்கலாம். கடுமையான விதிகள் இல்லாவிட்டால், ஏஐ தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்டு, அறிவார்ந்த மனிதர்களை விஞ்சிவிடும். இது அடுத்த ஆண்டிலேயே சாத்தியமாகும். இதனால் 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மனிதகுலம் அழிக்கப்படலாம், அல்லது ஆற்றலை இழக்கலாம். 2027 ஆம் ஆண்டின் இறுதியின் மக்கள் விடுமுறை நாட்களை கொண்டாட முடியாமல் போகலாம். இதற்கு 20% வரை வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் தலைகீழாக மாறும். வேலையின்மை அதிகரிக்கும். தொழில்கள் முடங்கும். இணையவழி வங்கி சேவைகள் முடங்கலாம். எனவே கையில் பணம், தேவையான தண்ணீர் மற்றும் உணவை வைத்துக் கொள்ளுங்கள்” என எச்சரித்திருக்கிறார். நிக்கோலாவின் இந்த கருத்து தற்போது இணையத்தில் இருவிதமான விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
