வியாழன் கோளின் அறியப்படாத ரகசியங்கள்: ஜூனோ அனுப்பிய துல்லிய புகைப்படங்கள்

வியாழன் கோளின் அறியப்படாத ரகசியங்கள்: ஜூனோ அனுப்பிய துல்லிய புகைப்படங்கள்

வியாழன் கோளின் அறியப்படாத ரகசியங்கள்: ஜூனோ அனுப்பிய துல்லிய புகைப்படங்கள்
Published on

அண்ட வெளியில் உள்ள பல கோள்களை குறித்து ஆராய்ந்தறியும் முயற்சிகள் தொன்று தொட்டு நடந்து வருகின்றன. வேறு கோள்களில் மனிதக் குடியேற்றங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வரும் நாசா விண்வெளி மையம் சூரியக்குடும்பத்தின் பெருங்கோளான வியாழன் குறித்த ஆராய்ச்சியில் அடுத்தபடியை எட்டியிருக்கிறது.

வியாழன் கோளுக்கு அமெரிக்கா அனுப்பிய ஜூனோ விண்கலம், மிகத் துல்லியமான புதிய புகைப்படங்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளின் மிகப் பெரிய செந்நிறப் பகுதி அருகே பறந்து சென்ற ஜூனோ விண்கலம், இதுவரை எடுக்கப்படாத பல கோணங்களிலும், வண்ணங்களிலும் புகைப்படங்களை அனுப்பியிருக்கிறது. வியாழனுக்கு சுமார் 3,500 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. வியாழன் கோளில் சுமார் 16 ஆயிரம் கிலோ மீட்டர் விட்டம் கொண்ட செந்நிறப் பகுதி, எப்படி ஏற்பட்டது என்பது குறித்த புதிரை விடுவிப்பதில், இந்தப் புகைப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.

சூரியக் குடும்பத்தின் பெருங்கோள் வியாழன்:
வியாழனுக்குச் சென்ற ஜுனோ சூரியக் குடும்பத்தின் வளியரக்கன் எனப் பெயர் பெற்ற கோள் வியாழன். புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்களைத் தாண்டி 5-வதாக அமைந்திருக்கும் வியாழன், ஒரு வாயுக் கோளம். இங்கு ஒரு நாள் என்பது 10 மணிக்கும் குறைவான நேரமே. 9 மணி 50 நிமிடத்தில் இந்தக் கோள் தன்னைத்தானே சுற்றிவிடுகிறது. சந்திரன், வெள்ளிக்கு அடுத்தபடியாக சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்கும் கோளும் இதுதான். பூமியைவிட இரண்டரை மடங்கு ஈர்ப்புவிசை கொண்ட வியாழன், சூரியக் குடும்பத்தில் உள்ள பிற கோள்களின் ஒட்டுமொத்த நிறையைக் காட்டிலும் அதிகமான நிறையைக் கொண்டிருக்கிறது.

மிக வேகமாகச் சுற்றுவதால், ஒரு ஆப்பிள் பழத்தைப் போல இதன் துருவப் பகுதிகள் சற்றுத் தட்டையாகக் காணப்படுகின்றன. தன்னுடைய நிறை மற்றும் ஈர்ப்பு வலிமையால் பெரும் எண்ணிக்கையிலான சிறு கோள்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது வியாழன். பூமியைப் போன்ற நிலத்தரை இல்லாத வியாழனின் மேற்பகுதி ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவால் நிரம்பியிருக்கிறது.இந்த வளியழுத்தம் காரணமாக மையப்பகுதியில் பாறை போன்ற கோளம் உள்ளது. இதன் வளிமண்டலம் வெவ்வேறு வாயுக்களைக் கொண்ட பட்டைகள் போலக் காணப்படுவதாலேயே, இதன் மேற்பகுதியில் கோடுகள் இருப்பது போலத் தென்படுகிறது. இந்தக் கோளின் மொத்த துணைக்கோள்களின் எண்ணிக்கை 63.

வியாழனின் ரகசியங்களைத் தேடும் பயணம்:
பயோனியர், வாயேஜர் போன்ற விண்கலன்கள் தங்களது பயணத்தின்போது வியாழன் கோளை ஆராய்ந்திருக்கின்றன. என்றாலும் 1989-ம் ஆண்டு நாசா அனுப்பிய கலிலியோ விண்கலம்தான் வியாழனின் வளிமண்டலப் பரப்புக்குள் முதன்முதலாகச் சென்று சாதனை படைத்தது. அட்லாண்டிஸ் விண்கலம் மூலம் ஐந்து விண்வெளி வீரர்கள் விண்ணுக்குச் சென்று கலிலியோவை வியாழன் நோக்கி அனுப்பி வைத்தனர். ஆறு ஆண்டுகள் பயணத்துக்குப் பிறகு வியாழனை அடைந்த கலிலியோ அதன் துணைக்கோள்கள் பற்றிய பல உண்மைகளை கண்டறிவதற்கு உதவியது. வியாழனின் துணைக் கோள்களுள் ஒன்றான யுரோப்பாவின் உள்பகுதியில் உப்பு நீர்க் கடல் இருப்பதை அறிந்து கூறியதும் கலிலியோதான். 2003-ம் ஆண்டு கலிலியோ விண்கலத்தின் பணி முற்றுப் பெற்றதும் வியாழனின் வளிமண்டத்தில் மோதவிட்டு அது அழிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி ஜூனோ என்ற விண்கலம் வியாழனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஐந்து ஆண்டு காலம். 280 கோடி கிலோ மீட்டர் தொலைவு என மிக நீண்டது ஜுனோவின் பயணம். இரண்டு ஆண்டுகள் பூமியைச் சுற்றிவந்த ஜுனோ, தேவையான வேகத்தைப் பெற்ற பிறகு கடந்த 2013-ம் ஆண்டு வியாழனின் சுற்றுப்பாதையை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வியாழனைச் சென்றடைந்த ஜுனோ, ஒரு மாதத்துக்குப் பிறகு அந்தக் கோளை நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது. வியாழன் கோள் எவற்றால் ஆனது? அதன் ஈர்ப்பு விசை எத்தகையது? இதுவரை நம்பப்படுவதைப் போல் அதற்கு பாறைகளால் ஆன மையப்பகுதி உண்டா? நீர் இருக்கிறதா என்பவை போன்ற பல கேள்விகளுக்கும் விடை தேடும் முயற்சியில் ஜுனோ ஈடுபட்டது.

வியாழன் கோள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்த புகழ்பெற்ற விஞ்ஞானி கலிலியோ, ரோமக் கடவுள் ஜுபிடர், அவரது மனைவி ஜுனோ ஆகியோரின் சிறிய உலோகச் சிலைகள் இந்த விண்கலத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. கலிலியோவின் கையெழுத்து அடங்கிய ஒரு பட்டையும் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த விண்கலம், வியாழனைச் சுற்றிவரும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது. 33 முறை சுற்றி வந்த பிறகு வரும் அக்டோபர் மாதம் வியாழனின் வளிமண்டலத்துடன் மோதி ஜூனோ சாம்பலாகும். அதற்குள்ளாக வியாழனின் அறியப்படாத பல ரகசியங்கள் நமக்குத் தெரியவந்திருக்கும்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com