2 மாதங்களில் 7 கோடி கணக்குகள் முடக்கம் - ட்விட்டர் அதிரடி

2 மாதங்களில் 7 கோடி கணக்குகள் முடக்கம் - ட்விட்டர் அதிரடி
2 மாதங்களில் 7 கோடி கணக்குகள் முடக்கம் - ட்விட்டர் அதிரடி

போலி கணக்குகள், வன்முறை தூண்டல்கள் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 7 கோடி பயன்பாட்டாளர்களின் கணக்குகளை, ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. 

உலக அளவில், மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் ட்விட்டர் முன்னிலையில் உள்ளன. கோடிக்கணக்கான மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். மிகவும் சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் கூட ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள். தங்களது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்கள். அதேபோல், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள் என பலரும் ட்விட்டரை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். 

ஆனால், சமீபகாலமாக ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் பரவும் வதந்திகள் காரணமாக வன்முறை சம்பவங்கள் நிகழ்வது அரங்கேறி வருகிறது. போலி கணக்குகள் மூலமாக பலரும் தவறான தகவல்களை பரப்பும் சிக்கலும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த பிரச்னைகள் மற்ற நிறுவனங்களைப் போல் ட்விட்டருக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. 

இதனால், ட்விட்டர் நிறுவனம் போலி மற்றும் சிக்கலுக்குரிய ட்விட்டர் கணக்குகளை களையெடுக்கும் பணியில் கடந்த ஆண்டு முதல் தீவிரமாகக் களமிறங்கியது. இந்நிலையில் தான், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 7 கோடி ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியாக 10 லட்சம் கணக்குகள் முடக்கப்படுகின்றன. கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது, முடக்கப்படும் ட்விட்டர் கணக்குகள் இரண்டு மடங்காகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. 

ட்விட்டரில் தற்போது 33.70 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 3 சதவீதம் பயன்பாட்டாளர்கள் அதிகரித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com