
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். வாங்கியது முதலே, ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை அவர் புகுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் 'ப்ளூ டிக்' பெற்ற பயனர்களிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதுமட்டுமின்றி, ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் முன்னணி நிறுவனங்கள், பிரபலங்கள், தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் சந்தா கட்டணம் செலுத்தாமல் இந்த அம்சத்தை பெற்றுவந்த சூழலில் தற்போது அதற்கான கட்டணத்தை இவர்களும் செலுத்த வேண்டி உள்ளது.
ப்ளூ டிக் அங்கீகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கடந்த வாரம் கெடு தேதி நிர்ணயித்திருந்தார் ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க். ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின்னர் சந்தா செலுத்தப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி சந்தா செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் அங்கீகாரம் நீக்கப்பட்டது. இதனால் விளையாட்டு, சினிமா, அரசியல் என பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பிரபலங்கள் சந்தா செலுத்தாத காரணத்தால் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்தனர்.
ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விஜய், ஆலியா பட், சிம்பு, விஜய் சேதுபதி, கார்த்தி, நயன்தாரா உட்பட இந்திய திரை பிரபலங்கள், ரோகித் சர்மா, விராட் கோலி என இந்திய விளையாட்டு பிரபலங்கள், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்தது பேசுபொருளாக மாறியது.
உலக அளவில் பிரபலமாக அறியப்படும் பாப் நட்சத்திரம் பியோனஸ், போப் பிரான்சிஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ரியாலிட்டி டிவி பிரபலம் கிம் கர்தாஷியன் ஆகியோர் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்தனர்.
இந்தச் சூழலில் குறைந்தது 10 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலங்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பிரபலங்கள் தாங்கள் ப்ளூ டிக்குக்கான கட்டணத்தைச் செலுத்தவில்லை என்ற போதிலும், தங்களுக்கு ப்ளூ டிக் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சில பிரபலங்கள் இது குறித்து வெளிப்படையாகவே கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, லெப்ரான் ஜேம்ஸ், ஸ்டீபன் கிங் மற்றும் வில்லியம் ஷாட்னர் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக்குகளுக்கு தான் தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.