“நீங்கள் வெளிநாட்டு நிறுவனம்”- மத்திய அரசிற்கு எதிரான ட்விட்டரின் மனு தள்ளுபடி; ரூ.50 லட்சம் அபராதம்
கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம், ட்விட்டரின் தலைமை இணக்க அதிகாரிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது மற்றும் தடை உத்தரவுகளுக்கு இணங்காமல் செயல்பட்டுவருவது தொடர்பாக எச்சரிக்கும் வகையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeiTY) ட்விட்டருக்கு ஒரு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், அதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. கடந்த மே மாதம் 23ஆம் தேதி இந்த மனு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்று அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டள்ளது கர்நாடகா உயர்நீதிமன்றம்.

வழக்கின் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒற்றை பெஞ்ச் நீதிபதி கிருஷ்ணா தீட்சித், அரசு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட போதிலும் ட்விட்டரானது தடை உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்பதை மேற்கோள் காட்டினார். “அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு உடன்படாததற்கான தண்டனையானது, ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் வரம்பற்ற அபராதம் என்று இருந்த போதிலும், உங்களை எதுவும் தடுக்கவில்லை” என்று குற்றஞ்சாட்டினார். மேலும் நோட்டீஸ் பிறப்பித்து ஒரு வருடம் காலதாமதம் ஆக்கிய நிலையில், திடீரென நீதிமன்றத்தை அணுகுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. “நீங்கள் ஒரு பில்லியன் டாலர் நிறுவனம், விவசாயிகள் கிடையாது” என்று தெரிவித்தார்.
இடைத்தரகராக மட்டுமே செயல்பட உரிமை உள்ளது!
வழக்கு குறித்து வாதிட்ட அரசாங்க வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், “இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பதிவிடும் பதிவுகள் மற்றும் கணக்குகளை தடைசெய்யவே கோரிக்கை விடுத்தோம். அதில் “காஷ்மீர் இட ஆக்கிரமிப்பு மற்றும் விடுதலைப் புலிகள் தலைவரின் உயிர்வாழ்வு” ஆகியவை அடங்கும் என்று வாதிட்டார்.

மேலும் “எப்போது இந்தியாவின் இறையான்மைக்கு பாதிப்பு வரும் வகையில் பதிவுகள் வருகிறதோ அப்போது அதை நீக்கவும், தடை விதிக்கவும் கோருவதற்கு தங்களுக்கு அதிகாரம் உள்ளது. ட்விட்டருக்கு இடைத்தரகராக மட்டுமே செயல்பட உரிமை உள்ளது என்றும்” தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் எங்களுக்கு சில உரிமை உள்ளது!
அதற்கு பதிலளித்த ட்விட்டர், தங்கள் பயனர்களின் தரப்பில் இந்த உரிமைகளுக்காக வாதிட்டதாக உறுதிப்படுத்தியது. “நாங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், அரசியலமைப்பின் 14வது பிரிவின் கீழ் எங்களுக்கு சில உரிமைகள் உள்ளது, அது சமத்துவத்திற்கான உரிமை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கணக்கைத் தடுப்பதற்கான முறையான காரணம் வழங்கப்படவில்லை. தகவல் தொழில்நுட்பச்சட்டத்தின் பிரிவு 69A-ன் கீழ் ஒரு URL-ஐ மட்டும் தடுப்பதற்காக முழுக்கணக்கையும் தடுக்க முடியாது” என்று வாதிட்டுள்ளது.
இந்திய மக்களின் உரிமையை உங்களால் கோர முடியாது!
அப்போது பேசியிருக்கும் நீதிபதி, “நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ட்வீட்களைத் தடுக்கவும், கணக்குகளைத் முடக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்று அரசின் வாதத்தை நான் ஏற்கிறேன். மாறாக இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கும் கருத்துரிமை மற்றும் தனி சுதந்திர உரிமைகளை உங்களுக்கும் நீங்கள் கோர முடியாது” என்று எச்சரிக்கை விடுத்து, நோட்டிஸ்க்கு காலதாமதம் ஆக்கியதற்கும், உடன்படாததற்கும் சேர்த்து ரூ.50 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும். தவறினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 5000 வரி சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்த முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.