புளூட்டோ ஒரு காலத்தில் சூரிய குடும்பத்தில் 9வது கிரகமாக இருந்தது. ஆனால் கடந்த 2006-ம் வருடத்திற்கு பிறகு விஞ்ஞானிகள் இதை ஒரு கோளாக மதிக்கவில்லை. ஆம், புளூட்டோ கோள் அல்ல... இது ஒரு குள்ள கிரகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஏன் என்றால் இந்த குள்ள கிரகம் பூமியை விட சிறியது. சிறியது என்றால் பூமியின் சைஸில் ஐந்தில் ஒரு பங்குதான் புளூட்டோவாம். மேலும் இந்த சிறிய கிரகத்தின் சுற்றுப்பாதையில் மற்ற பொருட்கள் கடந்து செல்வதால், இதை சிறுகோள் என்கிறார்கள். இது சூரிய குடும்பத்தில் இருக்கும் கைபர் பெல்டில் அமைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில் குளிர்ந்த பனிக்கட்டிகள் அடங்கிய 3,500க்கும் மேற்பட்ட சிறு கற்கள், என்னவென்று தெரியாத பொருட்கள், மில்லியன் கணக்கான சிறிய பனிக்கட்டிகள் என அனைத்தும் சூழ்ந்து ஒரு பாதையில் சென்றுக்கொண்டிருக்கும். அந்த பாதைதான் கைபர் பெல்ட்.
புளூட்டோ பூமியில் இருந்து சராசரியாக 5.9 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தூரத்திலிருந்து, சூரியனின் கதிர்கள் புளூட்டோவிற்கு பயணிக்க 5.5 மணி நேரம் ஆகும்.
இதன் வெப்பநிலை சுமார் -232 செல்ஸியஸாக இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதன் உள்ளே இறங்கினாலே ஃப்ரீஸ் ஆகிவிடுவோம். ஆகையால் அங்கு உயிரினங்கள் வாழ முடியாத அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கும்.
இதற்கு 5 நிலவுகள் உண்டு. அவை சரோன், நிக்ஸ், ஹைட்ரா, கெர்பரோஸ் மற்றும் ஸ்டைக்ஸ் ஆகியன. சரோன் புளூட்டோவை வெறும் 12,200 மைல்கள் (19,640 கிலோமீட்டர்) தொலைவில் சுற்றி வருகிறது. இதில் சரோனானது புளூட்டோ போன்று காணப்படுவதால் புளூட்டோ மற்றும் சரோன் பெரும்பாலும் இரட்டைக் கோள் என்று குறிப்பிடப்படுகின்றன.
2015-ம் ஆண்டு நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் என்ற விண்கலம் புளுட்டோவை தள்ளி நின்று ஆராய்ச்சி செய்தது. அதன்மூலம்தான், மேற்கூறிய உண்மைகள் விஞ்ஞானிகளுக்குத் தெரியப்படுத்தி இருக்கிறது.
புளூட்டோ என்று பெயரிட்டது ஒரு பள்ளி மாணவி என்றால் நம்ப முடிகிறதா?... ஆம் 1930ம் ஆண்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த வெனிஷியா பர்னி, என்பவர் இதற்கு புளூட்டோ (ரோமானிய கடவுளின் பெயர்) என்ற பெயரை வைத்ததாக சொல்லப்படுகிறது.
புளூட்டோவின் மேற்பரப்பு மிகவும் குளிராக இருப்பதால் அங்கு உயிர்கள் இருக்க வாய்ப்பில்லை. புளூட்டோவின் உட்புறம் வெப்பமானது என்றும், புளூட்டோவின் உள்ளே ஆழமான கடல் கூட இருக்கலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
புளூட்டோவின் பூமத்திய ரேகை விட்டம் சுமார் 2,377 கிலோமீட்டர் தான். புளூட்டோ பூமியின் அகலத்தில் 1/5ல் உள்ளது.
இது சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதால் சில சமயம் புளூட்டோ நெப்டியூனைவிட சூரியனுக்கு நெருக்கமாக வரும் என்கின்றனர்.
புளூட்டோவின் மேற்பரப்பில் மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் மற்றும் பள்ளங்கள் உள்ளன. புளூட்டோவின் வெப்பநிலை -375 முதல் -400 டிகிரி பாரன்ஹீட் (-226 முதல் -240 டிகிரி செல்சியஸ்) வரை குளிராக இருக்கும்.
புளூட்டோவின் மலைகள் 6,500 முதல் 9,800 அடி உயரம் கொண்டவை. மலைகள் நீர் பனியின் பெரிய தொகுதிகள், சில நேரங்களில் மீத்தேன் போன்ற உறைந்த வாயுக்களின் பூச்சுடன் இருக்கும். சுமார் 600 கிலோமீட்டர் நீளமான பள்ளத்தாக்குகள் எல்லாம் இந்த தொலைதூர குள்ள கிரகத்தின் சுவாரஸ்யமான அம்சங்களைக் கூட்டுகின்றன.
இதில் இருக்கும் பள்ளங்கள் சுமார் 260 கிலோமீட்டர் வரை அகலத்தைக் கொண்டிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த பள்ளங்கள் எப்படி வந்திருக்கக்கூடும் என்பது பற்றியும் சில அனுமானங்களை கூறி இருக்கிறார்கள். அதாவது புளூட்டோவின் நிலப்பரப்பில் சில அரிப்பு மற்றும் சில பள்ளங்கள் பனிகளால் நிரம்புவதை பார்க்கும்பொழுது, புளூட்டோவை டெக்டோனிக் சக்திகள் மெதுவாக மீண்டும் தோன்றுவதை காட்டுவதாக கூறுகிறார்கள். மேலும் புளூட்டோவில் காணப்பட்ட மிக முக்கியமான சமவெளிகள் உறைந்த நைட்ரஜன் வாயுவால் ஆனவை என்கிறார்கள்.
புளூட்டோ நைட்ரஜன், மீத்தேன் மற்றும் கார்பன் கோனாக்சைடு ஆகியவற்றால் உருவான மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டிருக்கிறது.
புளூட்டோ சூரியனுக்கு அருகில் இருக்கும்போது, அதன் மேற்பரப்பு பனிக்கட்டிகள் (திடத்திலிருந்து நேரடியாக வாயுவாக மாறி) உயர்ந்து தற்காலிகமாக மெல்லிய வளிமண்டலத்தை உருவாக்குகின்றன. புளூட்டோ சூரியனில் இருந்து வெகு தொலைவில் பயணிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் மிகவும் குளிராக மாறும். இந்த நேரத்தில், கிரகத்தின் வளிமண்டலத்தின் பெரும்பகுதி உறைந்து மேற்பரப்பில் பனியாக விழும்.