சந்திரயான் 3 திட்டத்தின் உந்துதலுக்கு சந்திரயான் 1, 2 ன் செயல்பாடுகளே காரணம்! - எப்படி தெரியுமா?
2003 சுதந்திர தின உரையில் வாஜ்பாய் அறிவித்த திட்டம்!
2003 ஆம் அண்டு நடந்த சுதந்திர தின உரையானது வித்தியாசமாக அமைந்தது எனலாம். இந்தியாவின் அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தனது சுதந்திர தின உரையில், ”நிலவை நோக்கிய இந்தியாவின் கனவு திட்டம் தொடங்கிவிட்டது விரைவில் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும்” என்று சந்திரயான் குறித்த தகவல்களை மகிழ்ச்சியோடு வெளியிட்டார்.
அதன் பின்னர் 2004, 2005 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்காகவே நிதியை ஒதுக்கி 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நிலவை நோக்கிய முதல் கனவு திட்டமான சந்திரயான் 1 விண்கலம் ஏவப்பட்டது.
நிலவு குறித்த ஆராய்ச்சியின் தொடக்க காலம்!
எப்படி உலகப்போர் காலகட்டத்தில் குவாண்டம் அறிவியலும், கருந்துளை அறிவியலும் மறந்துவிட்டு அணுகுண்டு கண்டுபிடிப்பை விஞ்ஞான உலகம் செய்ததோ, அதுபோன்றே 70க்கு பிறகு நிலவை நோக்கிய தங்களது பயணத்தை உலக நாடுகள் முடித்துக் கொண்டிருந்தன.
சொல்லப்போனால் நிலவில் அப்படி என்ன இருக்க முடியும்?. நாம்தான் சூரிய குடும்பத்தில் வெவ்வேறு கிரகத்தையும் சூரிய குடும்பத்தை தாண்டியும் பயணிக்க தொடங்கி விட்டோமே என கருதிய காலகட்டம் அது. அப்போது சந்திராயன் ஒன்று ஆர்ப்பிட்டர் நிலவின் தென்பகுதியினை எடுத்து வெளியிட்ட தரவுகள் முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக நிலவின் தென் துருவப் பகுதியில் நீர் மூலக்கூறுகள் நீர் ஆதாரங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டு கூறியது. இந்த தகவல் வெளியான உடனே உலக நாடுகள் ஆச்சரியத்தோடு இந்த கண்டுபிடிப்பை கண்டது.
நிலவில் நீர் பனிக்கட்டிகள்..
மறு வருடமே நாசா கண்ணில் விளக்கெண்ணையை போட்டு தமது மூன் மினராலஜி மேப்பர் (M3) ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகியவை கொண்டு சந்திரனின் மேற்பரப்பில் 2.8–3.0 μm க்கு அருகில் நீர் உறிஞ்சும் அம்சங்கள் இருப்பதாகவும் நீர் பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரத்தை ஏற்றுக் கொண்டது.
அதன் தொடர்ச்சியாக சந்திரனின் தென்பகுதியை நோக்கி உலக நாடுகள் தங்களது விண்கலங்களை அனுப்பத் தொடங்கின. சந்திரயான் 1 ன் முழு வெற்றிக்குப் பிறகு சந்திரயான் இரண்டு 2019 நிலவில் மேற்பரப்பில் பத்திரமாக இறங்க திட்டமிடப்பட்டது.
நிலவின் மேற்பரப்பில் வெடித்துச் சிதறிய சந்திரயான் 2 லேண்டர்! ஆனாலும்..!
இறங்கும் தருவாயில் சந்திரயான் லேண்டர் மேற்பரப்பில் வெடித்து சிதறியதால் திட்டம் பகுதி அளவு மட்டுமே வெற்றி பெற்றது. இருந்தாலும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கடந்த ஐந்து வருடமாக சந்திரனின் மேற்பரப்பை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்துள்ளது.
இதில் நிலவின் மேற்பரப்பை பற்றிய அறிவியல் தகவல்கள் மற்றும் தென் பகுதியில் ஏற்படும் வெப்ப மாறுபாடுகள் உள்ளிட்டவற்றையும் புகைப்படம் மூலம் எடுத்துள்ளது.
சந்திரயான் இரண்டு திட்டம் பகுதி அளவு தோல்வியடைந்தாலும் அதன் ஆர்பிட்டர் முழுமையாக பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தான் சந்திரயான் மூன்று லாண்டர் தரை இறங்க உள்ளது. எனவே சந்திரயான் மூன்று திட்டத்தின் உந்துதலுக்கு சந்திரயான் ஒன்று மற்றும் இரண்டு கொடுத்த குறிப்பிடத்தக்க வெற்றியே காரணம். அதோடு உலக நாடுகளும் நிலவின் தென்பகுதியை நோக்கி ஆய்வு செய்வதற்கு சந்திரயான் திட்டங்கள் ஒரு திறவுகோலாக அமைந்துள்ளது