CHATGPT CEO சாம் ஆல்ட்மேனை நீக்கியது OPENAI நிறுவனம்..!

CHATGPTன் தந்தை என புகழப்பட்ட சாம் ஆல்ட்மேனை அவர் வகித்த பதவிகளிலிருந்து விலக்கி, வேலையிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.
திறந்த AI
திறந்த AIதிறந்த AI

OPENAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் இணை நிறுவனருமான சாம் ஆல்ட்மேன், தனது தகவல்தொடர்புகளில் தொடர்ந்து வெளிப்படையாக இல்லை என்று அதன் வாரியம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அவரது சொந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆல்ட்மேனின் பணிநீக்கம் சிலிக்கான் வேலியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. .OPENAI உருவாக்கிய மிகவும் பிரபலமான சாட்பாட் CHATGPT. CHATGPT அறிமுகப்படுத்தப்பட்டதைத்  தொடர்ந்து, ஆல்ட்மேன் உலகின் மிகவும் பிரபலமான தொழில்நுட்ப நிர்வாகிகளில் ஒருவராகவும், செயற்கை நுண்ணறிவில் உச்ச தொட்ட நிபுணராகவும் அறியப்பட்டார்.

சாம் ஆல்ட்மென்
சாம் ஆல்ட்மென்

வெள்ளிக்கிழமையன்று OPENAI நிறுவனத்தின் போர்டு மெம்பர்கள் இணைந்து ஒரு கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதில், "தலைமை தாங்கும் அவரது திறனில் இனி நம்பிக்கை இல்லை" என்றும், நிறுவனம் முன்னேறும்போது புதிய தலைமை "அவசியம்" என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்தும் அவரை விலக்கியிருக்கிறார்கள்.

"வாரியத்துடனான அவரது தகவல்தொடர்புகளில் அவர் தொடர்ந்து வெளிப்படையாக இல்லை, அதனால் நிறைய சிக்கல்கள் உண்டாகிறது" என்று வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"OPENAI நிறுவனத்தில் என் வேலை நாட்களை நேசித்தேன். இது எனக்கு தனிப்பட்ட முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது, மேலும் உலகம் கொஞ்சம் மாறும் என்று நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக இதுபோன்ற திறமையானவர்களுடன் பணிபுரிவதை நான் மிகவும் விரும்பினேன். அடுத்து என்ன என்பதைப் பற்றி பின்னர் அறிவிக்கிறேன்"
X தளத்தில் சாம் ஆல்ட்மேன்

OPENAI நிறுவனத்தின் CTO மீரா முராட்டி சாம் ஆல்ட்மேனுக்குப் பதிலாக இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொர்ந்து, OPEN AI நிறுவனத்தின் தலைவரும், இணை நிறுவனருமான கிரேக் பிராக்மேனும்  தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

பிராக்மேன் தனது விலகலை வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில்  அறிவித்திருக்கிறார். "இன்றைய செய்தியின் அடிப்படையில், நான் விலகினேன்" என்று அவர் எழுதினார்.

இந்த அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த செய்தியை ஊழியர்களுடன் விவாதிக்க வெள்ளிக்கிழமை பிற்பகலில் OPENAI அவசர அனைத்துக் குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2022 நவம்பரில் அவரது நிறுவனம் CHATGPT என்கிற சாட்பாக்ஸை உருவாக்கியதிலிருந்து ஆல்ட்மேன் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி குரலாக கருதப்படுகிறார்.  

38 வயதான இவர் ஒரு மனிதன் அடையக்கூடிய எந்தவொரு பணியையும் முடிக்கக்கூடிய "செயற்கை பொது நுண்ணறிவு" (artificial general intelligence) அல்லது AGI என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார்.

எலான் மஸ்க் , பீட்டர் தியேல் மற்றும் Linkedin இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் உள்ளிட்ட உயர்மட்ட ஆதரவாளர்களிடமிருந்து 1 பில்லியன் டாலர் நன்கொடையுடன் 2015 ஆம் ஆண்டில் ஆல்ட்மேன் இந்த நிறுவனத்தை நிறுவ உதவினார் . எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டில், ஓபன்ஏஐ ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்தது.

கடந்த ஆண்டு சாட்ஜிபிடியை  வெளியிட்ட பிறகு, ஆல்ட்மேன் வெளிச்சத்திற்கு வந்தார். இந்தத் தொழில்நுட்பம் சமூகத்தை மறுவடிவமைக்கும்போது ஆபத்துகளுடன் வருகிறது என்று எச்சரித்தார். செயற்கை நுண்ணறிவு சட்டம் எந்த வடிவத்தை எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர் மே மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சாட்சியமளித்தார் 

ஆல்ட்மேன் நீண்ட காலமாக சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு prodigyயாகவே பார்க்கப்படுகிறார். அவருக்கு முந்தைய பிற தொழில்நுட்ப நிறுவனர்களைப் பின்பற்றி, ஆல்ட்மேன் 2005 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்டில் இருந்து வெளியேறி தனது சமூக வலைப்பின்னல் பயன்பாட்டான லூப்ட்டைத் தொடங்கினார், பின்னர் அதை அவர் 43 மில்லியன் டாலர்களுக்கு விற்றார். ஸ்டார்ட் அப் ஆக்சிலரேட்டர்  Y Combinator தலைவராக பணியாற்ற 2014 ஆம் ஆண்டில் அவர் நியமிக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டில் OPENAIயில் கவனம் செலுத்த Y Combinatorl இருந்து வெளியேறினார்.

உலக அளவில் CHATGPT பிரபலமடைந்ததைத் தொடர்ந்து, சாம் ஆல்ட்மேனின் செல்வாக்கும் உயர்ந்தது. அவர் சாட்ஜிபிடியின்  தந்தை மற்றும் "எங்கள் காலத்தின் ஓபன்ஹைமர்" என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 22 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் , ரிஷி சுனக், இம்மானுவேல் மக்ரோன்  , நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்தார்.

Sam altman
Sam altman

பணிநீக்கம் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு "இதுவரை நாம் சந்தித்த எந்தவொரு பெரிய தொழில்நுட்ப புரட்சிகளிலும் மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும்" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com