
‘Battlegrounds Mobile India’: பப்ஜியின் புது வெர்ஷனுக்கு தடை கோரும் அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு
பப்ஜி மொபைல் விளையாட்டிற்கு மாற்றாக ‘Battlegrounds Mobile India’ என்ற புதிய மொபைல் கேம் ஒன்று கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. தற்போதைக்கு சோதனை ஓட்டமாக பீட்டா சோதனையாளர்கள் இந்த கேமை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இந்த கேமை தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’ வடிவமைத்துள்ளது.
இந்நிலையில், அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு ‘Battlegrounds Mobile India’ விளையாட்டிற்கு தடை வேண்டுமென குரல் கொடுக்க தொடங்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இது மாதிரியான கேம்களுக்கு கூகுள் நிறுவனம் ஒரு போதும் அனுமதி அளிக்க கூடாது என அந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கான கேம் என சொல்லிவிட்டு இதில் சேகரிக்கப்படும் தரவுகளை ஏன் பிற நாடுகளுடன் பகிர வேண்டுமெனவும் கேள்வி எழுப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கேமுக்கு தடைவிதிக்க வேண்டும் என அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் நினோங் எரிங், பிரதமர் மோடியிடம் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். இந்த கேமை வடிவமைத்த KRAFTON சீன நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளதால் இதற்கு தடை வேண்டும் என சொல்லப்பட்டு வருகிறது.