வானொலி| இரவு நேரங்களில் இந்தி பாடல்கள்.. தமிழ் நேயர்கள் அதிருப்தி!
கையடக்க செல்ஃபோன்களில் ஆன்லைன் பாட்காஸ்ட் மூலம் விரும்பிய பாடல்களை கேட்டு மகிழ்ந்தாலும், FM பன்பலைகளின் மவுசும் குறைந்துவிடவில்லை.
ஆன்லைன் இசை ஆப்களின் மூலம் பாடல்களை கேட்கும்போது, டேட்டா இழப்பு, பேட்டரி இழப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுபோன்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல், உடலுழைப்பு செலுத்துபவர்களை உற்சாகம் குறையாமல் இசை மழையில் நனைய வைப்பதில் இன்று வரை FM பன்பலைகளுக்கு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது.
தற்போது அதற்கு வேட்டு வைக்கும் விதமாக அகில இந்திய வானொலியில் இந்தி பாடல்களும், செய்திகளும் ஒலிபரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வானொலியில் இந்தி பாடல்கள்!
திருச்சி 102.1 மற்றும் சென்னை 101.3 ஆகிய பன்பலைகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5.45 மணி வரை தமிழ் ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டு, இந்திப் பாடல்கள் மற்றும் இந்தி செய்திகள் ஒலிபரப்பப்படுவது தமிழ் நேயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் இந்தியை திணிக்கும் ஒரு வழி என கண்டன குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயரைக்கொண்ட அகில இந்திய வானொலி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அந்தத் துறையின் இணை அமைச்சராக எல்.முருகன் உள்ள நிலையில், 24 மணி நேரமும் தமிழ் மொழியிலேயெ பாடல்களையும், செய்திகளையும் ஒலிபரப்ப வேண்டும் என தமிழ் நேயர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, சமூக விழிப்புணர்வு, விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள், செய்திகள் என நேயர்களுக்கு பல்வேறு தகவல்களை அள்ளி வழங்கும் அகில இந்திய வானொலி, மொழி, கலாசார பன்முகத் தன்மையை கைவிட்டுவிடக் கூடாது என்பதே தமிழ் நேயர்களின் விருப்பமாக உள்ளது.