மிகப் பெரிய பெளர்ணமி நிலவை ரசித்த கொடைக்கானல் மக்கள்
‘சூப்பர் ஸ்நோ மூன்’என அழைக்கப்படும் பனி நிலவை கொடைக்கானல் வாழ் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
அமெரிக்காவில் இது பனிக்காலம். இந்தக் குளிர்காலத்தில் வரும் பௌர்ணமியை அமெரிக்க மக்கள் ‘சூப்பர் ஸ்நோ மூன்’ என்று அழைக்கின்றனர். இந்த “சூப்பர் ஸ்நோ மூன்” இன்று காண முடிந்தது. இந்த சூப்பர் ஸ்னோ மூனை அனைத்து நாடுகளிலும் வெறும் கண்களாலே பார்க்க முடியும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் இந்த நிகழ்விற்கு ‘சூப்பர் ஸ்நோ மூன்’ என்றும் ‘ஹங்கர் மூன்’ அழைப்பர். இதை தமிழில் ‘பனிக் கால பெளர்ணமி நிலவு’என்றும் ‘பசி நிலவு’ என்றும் கூறலாம். அதாவது இந்த ஆண்டில் தோன்றும் மிகப் பெரிய நிலவு இதுதான். பூமிக்கு மிக அருகில் வரும் நிலவும் இதுவே.
2019 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பனி நிலவு இன்று மாலை, கிழக்கு வானில் உதிக்கும் எனக் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பிரபல சுற்றுலா தலமான கோக்கர்ஸ் நடைபகுதியிலிருந்து கிழக்கில் உதயமாகிய பனி நிலவை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
இந்தப் பனி நிலவு,வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% கூடுதல் ஒளியுடனும் காணப்பட்டதாக, வான் இயற்பியல் ஆய்வக ஆய்வாளர் செல்வேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணி அளவில் இந்த சூப்பர் ஸ்நோ மூன் தெரிந்தது என்று வானியல் ஆய்வாளர்கள் கூறினார். இந்த சூப்பர் ஸ்நோ மூனின் தோற்றம் மிக அழகாகவும் மஞ்சள் நிறத்தில் இருந்தது என்றும் அவர் கூறினார்.