சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ‘புதிய தலைமுறை’யுடன் கைகோர்க்கும் சர்வதேச செய்தி ஊடகம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ‘புதிய தலைமுறை’யுடன் கைகோர்க்கும் சர்வதேச செய்தி ஊடகம்!
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ‘புதிய தலைமுறை’யுடன் கைகோர்க்கும் சர்வதேச செய்தி ஊடகம்!

ஜெர்மனை சேர்ந்த பிரபல டி டபுள்யூ செய்தி நிறுவனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்திய ஒரு நிகழ்ச்சிக்காக ‘புதிய தலைமுறை’ தமிழ் செய்தி நிறுவனத்துடன் கை கோர்க்கிறது.

இன்றைய தேதிக்கு, அனைத்துமே காட்சி வழி அனுபவம்தான். அதுவும்  யூ-ட்யூப் தான் அனைவருக்கும்  நினைவு வரும். அதனாலேயே சர்வதேச ஊடகங்களும்கூட, மாநில மொழிகளில் தங்களின் யூ-ட்யூப் சேனல்களை தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான டாய்ச்ச வெல்ல’ (Deutsche Welle) ஊடகம்,  நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழில் தனது சேவையை தொடங்கியுள்ளது.

DWவின் 32ஆவது மொழி சேவையாக தமிழ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் ஹிந்தி, வங்காளம் மற்றும் உருது ஆகிய சேவைகள் வழக்கத்தில் உள்ளன. DW தமிழ் யூடியூப் சேனல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள இளம் மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களையும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வவளகுடா நாடுகள், கனடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களையும் இலக்காகக் கொண்டு முதன்மையாக இயங்கவுள்ளது.

DW நிறுவனத்தின் இந்திய வரலாறு: இந்திய தலைநகர் புதுடெல்லியல் DW நிறுவனத்தின் புதிய அலுவலகம் கடந்த மாரச் மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னணியாக இந்தியாவில் DW-வின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே, அந்நிறுவனம் தமிழ்நாடு உள்பட தென்னிந்திய மாநிலங்களில் நிறுவனத்தை விரிவாக்க நினைக்கின்றன. அந்தவகையில் DW தனது யூடியூப் மொழிச் சேவையை தமிழுக்கு விரிவுப்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்த முயற்சி, அதன் உள்ளடக்கங்களை தமிழ் பயனர்களுக்கு ஏற்றார் போல அளிப்பதற்கு உதவும் என சொல்லப்பட்டுள்ளது.

DW தமிழ் சேவை குறித்து DW தலைமை இயக்குநர் பீடர் லிம்போர்க் கூறுகையில், “தமிழ் மொழியில் சேவையை தொடங்குவதன் மூலம் அந்த மொழி சார்ந்த பிராந்திய மக்களை எங்களால் சென்றடைய முடியும் என்றார்.  ஒருபுறம் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களாகவும், மறுபுறம் சமூகத்தின் பாரம்பரிய கட்டமைப்பு கடைப்பிடிப்பவர்களாகவும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஐரோப்பா மற்றும் தமிழகத்திலிருந்து வரும் காணொளிகளுக்கு அப்பாற்பட்டு, வறுமை குறைப்பு, சமூகத்தில் பெண்களின் முக்கிய பங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளும் தங்கள் பயனர்களுக்கு நாங்கள் வழங்கும் முக்கிய தலைப்புகளாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள DW வின் நிர்வாக இயக்குநர் ஜெர்டா மெயூர், “16 மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். உதாரணமாக நான் என்ன படிக்க வேண்டும்? நான் எப்படி பணி செய்ய வேண்டும்? ஒரு நிலையான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? இந்த சமூகத்துக்கு என்னால் எப்படி திருப்பி செலுத்த முடியும்? என பல கேள்விகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர். பிராந்தியம் தொடர்பான எங்கள் காணொளிகள் இது போன்ற கேள்விகளை பிரதிபலிக்கும்” என்றுள்ளார். மேலும் இந்திய சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து வெளிவரும் புதுமையான கண்டுபிடிப்புகளையும், யோசனைகளையும் ஆசிரியர் குழு காட்சிப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் மெயூர் தெரிவித்துள்ளார்.

DW தமிழ் சேவையின் ஆசிரியர் குழுவில் ஐந்து செய்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இச்சேவையின் ஆசிரியர், ஜெர்மனியின் போன் நகரிலிருந்து ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல் பணியை மேற்கொள்வார் என்றும், பிற நான்கு செய்தியாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் களத்திலிருந்து செய்தியை வழங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. “நாம் களத்தில் இருக்கும்போதுதான் தரமான செய்திகளை கண்டுபிடித்து அதை நேர்த்தியாகவும், உண்மையாகவும் பதிவு செய்ய முடியும். DW வும் அதைத்தான் குறைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் ஆசியாவுக்கான DW வின் இயக்குநர் டெபராட்டி குஹா.

தமிழ் மொழியில் தனது புதிய சேவையை தொடங்கும் இந்த தருணத்தில், DW நிறுவனத்துடன் சென்னையை மையமாக கொண்டு இயங்கி வரும் முன்னணி செய்தித்தொலைக்காட்சியான ‘புதிய தலைமுறை’யும் இணைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் அதிகம்பார்க்கப்படும் தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘எக்கோ இந்தியா’ என்ற வெற்றிகரமான நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை தயாரிக்க உள்ளது. இந்த நிகழ்ச்சி, வரும் நவம்பர் 13ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு புதிய தலைமுறை செய்தித்தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com