பூமி தனது ஆறாவது பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த புவியியலியல் பேராசிரியர் ரோத்மேன் டேனியல் எச்சரித்துள்ளார்.
பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் பூமி சுனாமிகள், சூறாவளிகள் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உட்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். படிப்படியாக பல தாக்குதலை சந்திக்கும் பூமி, 2100 ம் ஆண்டிற்குள் முற்றிலும் அழிவை சந்திக்கும் என மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முதலில் உலகெங்கிலும் உள்ள கடல் இனங்கள் 95 சதவிகிதம் அழியும். இதைதொடர்ந்து, மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜுராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில், உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்தது. இதற்கு இணையான ஒரு பேரழிவு வரும் 2100ம் ஆண்டுக்குள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கார்பன் சுழற்சியே கடல்வாழ் உயிரினங்களும், மற்ற உயிரினங்களும் அழிவதற்கான காரணம் என பேராசிரியர் டேனியல் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில், தேசிய அகாடமி ஆஃப் சயின்ஸ் ஆஃப் ப்ரொசீடிங்ஸில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், 2100 ஆம் ஆண்டு பூமியில் நிலவும் வெப்ப நிலை காரணமாக பூமியில் உயிர்வாழ்வது கடினம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.