ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள்... அப்ப இனி தங்கம்..?
ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பான CERN-ல் உள்ள Large Hadron Collider (LHC) எனப்படும் உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கியில் பணிபுரியும் இயற்பியலாளர்கள், ஈய அணுக்கருக்களை அதிவேகத்தில் மோதச் செய்து, மிகக் குறுகிய காலத்திற்கு தங்க அணுக்களை உருவாக்கியுள்ளனர்.
விஞ்ஞானிகள் தங்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இதை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஈய அணுக்கள் மிகக் குறுகிய நேரமே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டாலும், அவை தங்கமாக மாறுவதற்குத் தேவையான ஆற்றலைப் பரிமாறிக் கொண்டன. இந்த அரிய மாற்றம் கிட்டத்தட்ட நேருக்கு நேர் மோதல் நிகழாத சமயங்களில் நிகழ்ந்தது என்று இந்த சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுப்பிடிப்புகள் ‘ பிசிகல் ரிவியூ லெட்டர்ஸ்” என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன
இந்த கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால், இருந்த alice கூட்டு முயற்சி குழு தங்கத்தை உருவாக்க தனித்துவமான வழியைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆராய்ச்சி சொல்வதென்ன?
LHC-க்குள் ( மிகப்பெரிய துகள் முடுக்கி) இரண்டு ஈய அணுக்கருக்கள் மிக நெருக்கமாக வரும்போதும், அவை மோதாமல் விலகிச் செல்லும்போதும் என்ன நடக்கும் என்பது ஆராயப்படுகிறது. இந்த நிகழ்வின்போது, இந்த அணுக்களை சுற்றியுள்ள சக்திவாய்ந்த மின்காந்த புலங்களால் ஈயம் வேறு தனிமமாக மாறக்கூடும் என்றும், அதுதான் தங்கம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள்.
இப்படி எவ்வளவு தங்கத்தை உருவாக்கியுள்ளனர்?
2015 -2018 வரையிலான காலகட்டத்தில், சுமார் 86 பில்லியன் தங்க அணுக்களை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். இது கேட்பதற்கு அளவில் அதிகமாக தோன்றலாம். ஆனால், அனைத்தையும் ஒன்று சேர்க்கும்போது, அதன் எடை சுமார் 29 பைக்கோகிராம்கள் மட்டுமே இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அதாவது ஒரு கிராமில் டிரில்லியன் மடங்கு அளவு குறைவு என கூறப்படுகிறது. தெளிவாக விளக்க வேண்டுமாயின், ஒரு சிறிய நகையை செய்வதற்கு கூட, இதனை விட பல மடங்கு அதிகமாக தங்கம் தேவைப்படுகிறது என்பதுதான் நிதர்சனம்.
இந்த முடுக்குவிப்பானால், (LHC) ஒரு நொடிக்கு 89000 தங்க அணுக்களை மட்டுமே உருவாக்க முடியும் என்றும், அது மிக மிக சிறிய பகுதி என்றும், உருவாகும் தங்க அணுக்கள் சில நொடிகளிலேயே பிரிந்து விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சோதனையை தற்போது நடைமுறையில் சாதியமாக்க முடியாது .. இது நடைமுறைக்கு வர இன்னும் வெகு காலங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அப்படி எளிதாக தங்கத்தை உருவாக்கும் நிலை ஏற்பட்டால், தங்கத்தின் மதிப்பும் குறைந்து உலக அளவில் மிகப்பெரிய பொருளாதாரா சீர்குலைவை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.