வருங்காலப் போக்குவரத்துத் தொழில்நுட்பம்: ஒரு ஓட்டுநர், பல வாகனங்கள்!

வருங்காலப் போக்குவரத்துத் தொழில்நுட்பம்: ஒரு ஓட்டுநர், பல வாகனங்கள்!

வருங்காலப் போக்குவரத்துத் தொழில்நுட்பம்: ஒரு ஓட்டுநர், பல வாகனங்கள்!
Published on

ஓட்டுநர் இல்லாத வாகனங்களைப் போல, ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர் வருங்காலத்தில் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட தூரம் செல்லும் நெடுஞ்சாலைகளில் அசுர வேக வாகனங்களால் பெரும் எண்ணிக்கையில் விபத்துகள் நடக்கின்றன. ஒழுங்கற்ற வேகம், நெரிசலுக்கும் வழிவகுத்து விடுகிறது. இதுபோன்ற நெடுஞ்சாலை விபத்துகளையும், நெரிசலையும் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனை ப்லாடூன் எனப்படும் வாகனத் தொடர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், வால்வோ உள்ளிட்ட 7 நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்த யோசனை, சோதனைக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

ஒரு வழிநடத்தும் வாகனம், அதன் பின்னால் கட்டுப்பாட்டு அறையைக் கொண்ட மற்றொரு வாகனம் ஆகியவற்றுடன், வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் பிற வாகனங்கள் இணைக்கப்படுவதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. முதல் வாகனத்தில் இருந்து இரண்டாவது வாகனம், இரண்டாவதில் இருந்து மூன்றாவது என அடுத்தடுத்த வாகனங்கள் கண்ணுக்குப் புலப்படாத வைஃபை சங்கிலித் தொடரில் பிணைந்திருக்கும். வாகனத் தொடரில் ஒரு கார் இணைந்துவிட்டால், ஸ்டீரிங் மற்றும் பிரேக் போன்றவை தாமாகவே செயல்படத் தொடங்கும். இதனால் ஓட்டுநர் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் அல்லது சாப்பிடுவது, புத்தகம் படிப்பது, கணினியை இயக்குவது உள்ளிட்ட பிற பணிகளை செய்யலாம். தேவைப்படும் நேரத்தில் ஒரு கார், இந்தத் தொடரில் இருந்து பிரிந்து செல்லவும் முடியும். இதற்காக டேப்லெட் போன்ற ஒரு கருவி ஒவ்வொரு வாகனத்திற்கும் வழங்கப்படுகிறது.

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் இந்தத் தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்வது தனிச் சிறப்பு. வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், சாதாரணமான எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைவதற்குத் தயாராகிவிடும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் சாத்தியம்.

பல சிறப்புகளைக் கொண்ட இந்தத் தொழில்நுட்பத்தில் பலராலும் கவனிக்கப்படும் அம்சம் பாதுகாப்பு. கம்பியில்லாமல், தொடராக இணைக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கார்கள் வழிநடத்தும் வாகனத்தை சற்றும் பிழையில்லாமல் பின்பற்ற வேண்டும். திடீரென பிரேக்கை பயன்படுத்தும்போதும், அபாயகரமான வளைவுகளில் திரும்பும்போதும் விபத்துகள் நேர்வதற்குச் சாத்தியங்கள் அதிகம். ஆனால், வழிநடத்தும் வாகனத்தில் திறன்பெற்ற ஓட்டுநர்கள் இருப்பதாலும், வால்வோ பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப்படுவதாலும் விபத்துகளை முழுவதுமாகத் தவிர்த்து விடலாம் என்பது இந்தத் திட்டக் குழுவினரின் வாதம்.

இருந்தாலும், மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் கார் செல்லும்போது, ஸ்டியரிங்கை விட்டுவிடும் அளவுக்கு மக்களிடம் துணிச்சலை உருவாக்குவதிலும், அரசுகளின் நம்பிக்கையைப் பெற்று சட்டச் சிக்கல்களைத் தகர்ப்பதிலும்தான் இந்தத் திட்டத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com