Sanchar Saathi
Sanchar Saathipt web

அது என்ன சஞ்சார் சாத்தி? சொல்வதற்கு ஏகப்பட்டவை இருக்கின்றன.. You Need to Know

உங்கள் மொபைலில் ஒரு செயலி இருப்பதாலேயே, அது உங்களைக் கண்காணிக்கிறது என்று சொல்லிவிட முடியுமா என்பது சஞ்சார் சாத்தி செயலி ஆதரவாளர்களின் அல்லது ஆளும் அரசு ஆதரவாளர்களின் வாதம். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாதம் தான். ஆனால்....
Published on

முதல்முறையாகப் பேசுபொருளாகியிருக்கிறது சஞ்சார் சாத்தி செயலி. முதல்முறை என்று சொல்வதற்கு நிச்சயம் காரணம் இருக்கிறது. ஏனெனில் இது டிசம்பர் மாத டிட்வா புயல் போல திடீரென முளைத்த செயலி அல்ல. கடந்த சில மாதங்களாகவே மக்கள் பயன்பாட்டில் இருப்பதுதான். கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த செயலியை இதுவரையில் 1 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

திருடப்பட்ட மொபைல்களில் , 42 லட்சம் மொபைல்களை முடக்கியிருப்பதாகவும், 26 லட்ச மொபைல்களை டிரேஸ் செய்திருப்பதாகவும், 7 லட்ச மொபைல்களை மீட்டிருப்பதாகவும் அதன் வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தரவுகளை எடுத்துக்கொண்டால் 1,89,876 மொபைல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன; 1,18,054 மொபைல்கள் டிரேஸ் செய்யப்பட்டிருக்கின்றன; 43,549 மொபைல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

பொதுவாக நம்முடைய மொபைல்கள் திருடுபோனால், IMEI நம்பரை வைத்து அதிகபட்சம் புகார் அளிப்போம். ஆனால், அடுத்து ஒரு மிகப்பெரிய கேள்வி எழும். அது காணாமல் போன மொபைல் பற்றி அல்ல. அடுத்து எந்த மொபைலை வாங்கலாம் என்பதுதான் அந்தக் கேள்வியாக இருக்கும். நிறைய மன உளைச்சலுடனும், குறைந்த பட்ஜெட்டிலும் வேறொரு மொபைலை வாங்குவோம். இப்படியான ஒரு சராசரி இந்தியராகிய நமக்கு களவு போன மொபைலை, அரசாங்கமே கண்டுபிடித்துக்கொடுத்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். முதலில் இந்த செயலி என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பார்ப்போம்.

மோசடி புகார்கள்; ஆபத்தான லிங்குகள்; தொலைந்து போன மொபைல்கள்; உங்கள் பெயரில் இருக்கும் மொபைல் எண்கள்; உங்கள் மொபைலின் நம்பகத்தன்மை போன்ற பிரச்னைகளுக்கு இதைப் பயன்படுத்த முடியும். அதே போல் இந்திய அளவில் இருக்கும் வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட எண்கள் எவை போன்ற தகவல்களையும் இந்த வலைத்தளம் மூலம் நாம் சரி பார்த்துக்கொள்ளலாம். இவ்வளவு இருந்தும் ஏன் எதிர்கட்சிகள் முதல் பலர் இதை எதிர்க்கிறார்கள். வாருங்கள் பார்க்கலாம்.

யாருக்குத் தேவையோ அவர்கள் இந்த செயலியை இலவசமாக பதிவு இறக்கிக்கொள்ளலாம். இதுதான் தற்போதைய நடைமுறை. ஆனால், அதில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. சமீபத்திய சுற்றறிக்கையின்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து மொபைல்களிலும், இந்த செயலி pre- install செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது நீங்கள் வாங்கிய புது மொபைலை ஆன் செய்யும் போதே , மற்ற சில செயலிகளுடன் இந்த செயலியும் உங்கள் மொபைலில் இருக்கும். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் மொபைல்களுக்கும் இந்த விதி பொருந்தும். ஏற்கெனவே நம் கைகளில் இருக்கும் பழைய மொபைல்களில் சாப்ட்வேர் அப்டேட் என்ற பெயரில் இந்த செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பது அடுத்த செக். இந்த செயலியை நாம் வேண்டாம் என நினைத்தாலும் அன் இன்ஸ்டால் செய்ய முடியாது என்பது நமக்கு வைக்கப்பட்டிருக்கும் செக்மேட். ஒரு நாட்டின் குடிமக்களை எந்த எல்லைக்கும் சென்று கண்காணிப்போம் என வட கொரியா, ரஷ்யா, சீனா போன்ற தேசங்கள் எடுக்கும் முடிவுக்கு ஒப்பானது இது என எச்சரிக்கிறார்கள் டிஜிட்டல் வல்லுநர்கள்.

உங்கள் மொபைலில் ஒரு செயலி இருப்பதாலேயே, அது உங்களைக் கண்காணிக்கிறது என்று சொல்லிவிட முடியுமா என்பது சஞ்சார் சாத்தி செயலி ஆதரவாளர்களின் அல்லது ஆளும் அரசு ஆதரவாளர்களின் வாதம். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாதம் தான். சஞ்சார் சாத்தி செயலி மொபைலில் இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதை அன் இன்ஸ்டால் செய்ய முடியாது என்பதுதான் பிரச்னை. கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மத்திய அமைச்சர் Jyotiraditya Scindia இந்த செயலி கட்டாயமானது இல்லை; வேண்டாமென நினைப்பவர்கள் டெலிட் செய்துகொள்ளலாம். பயனாளர்கள் ஆக்டிவேட் செய்யாவிட்டால், இந்த செயலி எதையும் கண்காணிக்காது என பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். ஆனால், மத்திய அரசிடமிருந்து வந்த அறிக்கை அதற்கு முரணாக இருக்கிறது. Functionalities are not disabled or restricted என தெளிவாகவே சுற்றறிக்கையில் இருக்கிறது.

சஞ்சார் சாத்தி
சஞ்சார் சாத்திpt web

மத்திய அரசின் அறிக்கையையும், அமைச்சர் சொன்னதையும் ஒதுக்கி வைத்துவிடுவோம். கூகுள் பிளே ஸ்டோரில் , நம் மொபைலில் இருக்கும் செயலிகள் என்ன என்ன விஷயங்களைக் கண்காணிக்கின்றன என்பதை நம்மால் பார்க்க முடியும். சஞ்சார் சாத்தி என்கிற இந்த செயலி கிட்டத்தட்ட மொபைலில் இருக்கும் எல்லா பர்மிஷன்களையும் கேட்டிருக்கிறது. கேமராவில் புகைப்படங்கள், வீடியோக்களுக்கான பர்மிஷன்; நாம் யாருக்கு எல்லாம் கால் செய்திருக்கிறோம் என்கிற call log; நம் மொபைலின் ஸ்டேட்டஸ், நம் மொபைலில் இருக்கும் smsகளை படிக்கும் வசதி; நம் மொபைலில் இருந்து தானாகவே sms அனுப்பும் வசதி; flashlight அனுமதி, வைப்ரேசனுக்கான அனுமதி, மொபைலை ஆன் செய்தவுடன் இயங்கும் வண்ணம் செட் செய்திருக்க வேண்டும்; மொபைல் sleep மோடுக்கு செல்லாமல் தடுப்பது, முழுமையான இண்டெர்நெட் access; உங்கள் மெமரி கார்டு ஸ்டோரேஜில் இருக்கும் ஃபைல்களைப் படிப்பது/ அழிப்பது உள்ளிட்ட பல்வேறு பர்மிஷன்களை இந்த செயலி கேட்கிறது.

இதில் பாதி பர்மிஷன்கள் படிக்க திகிலூட்டுவது போல் இருந்தாலும் , நாம் பயன்படுத்தும் சில செயலிகள் இப்போதே இந்த பர்மிஷன்களை நம்மிடம் பெற்று வருகின்றன. நாம் பயன்படுத்தும் உணவு செயலிகளோ, வீடியோ செயலிகளோ நம் தகவல்களை வைத்து கைது செய்யாது. கைது செய்யவும் முடியாது. அதிகபட்சம் விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். ஆனால், ஒரு அரசு நினைத்தால் கைது செய்ய முடியும். சீனாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக இப்படியான செயலிகள் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கின்றன. சீனா அரசாங்கமே இவற்றை முன்னின்று கண்காணிக்கின்றன. யாரோ யாரோ அவர்களின் செயலி மூலம் உங்களை கண்காணிக்கலாம், அரசு கண்காணிக்கக்கூடாதா என்பது உங்கள் கேள்வியாக இருப்பின் ஒரு அரசு ஒருநாளும் privilegedகளுக்கான அரசாக இருக்கக்கூடாது. ஆப்பிளின் IOS தரும் பாதுகாப்பு, ஏன் கூகுள் ஆண்டிராய்டு பயன்படுத்தும் சாதாரண குடிமகனுக்கு இல்லை என்று கேட்க வேண்டிய அரசு, அதிலிருக்கும் ஓட்டைகளை வைத்து நானும் கொஞ்சம் எடுத்துக்கொள்கிறேன் என்பது ஒரு நாளும் சரியான வாதமாக இருக்க முடியாது.

இந்த செயலி மூலம் பெறப்படும் தகவல்களை யாருடனும் ஷேர் செய்யமாட்டோம் என அரசு உறுதியளித்திருப்பது மட்டுமே ஆறுதலான விஷயம். அதே போல், எந்த டேட்டாவையும் நாங்கள் கலெக்ட் செய்வதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இவற்றிற்கான உத்தரவாதம் என்ன?. உண்மையில் இந்தியா மாதிரியான தேசத்தில் இவற்றை பாதுகாக்கும் அளவுக்கு எல்லாம் நம்மிடம் ஸ்திரத்தன்மை கொண்ட ஸ்டோரேஜ் சென்டர்கள் இல்லை என்பதே வருத்தமான உண்மை. இப்படியிருக்கும் சூழலில் ஆளும் அரசாங்கத்தின் எலிகளாக நாம் மாறப் போகிறோமா என்கிற அச்சம் இயல்பாகவே எழுகின்றது. சஞ்சார் சாத்தியை விடுங்கள், கொரோனா சமயத்தில் ஆரோக்கிய சேது செயலி உங்களின் நினைவுக்கு வருகிறதா? அதிலிருக்கும் தகவல்கள் எல்லாம் என்ன ஆனதே என்றே தெரியவில்லை.

சஞ்சார் சாத்தி வலைதளத்தின் முதல் பக்கத்தில் Recovery percentage என ஒரு பத்தி இருக்கிறது. அதிலேயே அத்தனை பிழைகள். கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் சஞ்சார் சாத்தி செயலியை பயன்படுத்தியவர்கள் அத்தனை பிழைகளை சுட்டிக்காட்டி வருகிறார்கள். இதையெல்லாம் முதலில் சரி செய்யலாம்.

இந்தியா மாதிரியான ஜனத்திரள் கொண்ட ஒரு தேசம், அதன் குடிமக்களுக்கு ஐரோப்பிய கண்டம் போன்ற ப்ரைவசி பாதுகாப்பினை தருவதே குறிக்கோளாக இருக்க வேண்டும். சீனாவும், ரஷ்யாவும், வட கொரியாவும் ஒரு நாளும் ஜனநாயக தேசத்திற்கு முன்மாதிரிகளாக இருக்க முடியாது.

தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அரசே, வலுக்கட்டாயமாக ஒரு செயலியை இன்ஸ்டால் செய்வதென்பது ஆபத்தான போக்கு. கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, மொபைலில் இந்த செயலில் PRE INSTALL செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கிறது மத்திய அரசு என்பது ஆறுதலான விஷயம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com