சூரிய மின்சக்தி உற்பத்தியையும் பாதிக்கும் மாசு

சூரிய மின்சக்தி உற்பத்தியையும் பாதிக்கும் மாசு
சூரிய மின்சக்தி உற்பத்தியையும் பாதிக்கும் மாசு

காற்று மாசுபாட்டால் சூரிய மின்சக்தி உற்பத்தி 25 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தும் சீனா, அரேபிய தீபகற்பம் மற்றும் இந்தியா போன்ற காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் மின்சக்தி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. காற்றில் கலந்துள்ள தூசுகள் உள்ளிட்ட மாசுகள் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் தகடுகளின் மேல் படிந்து விடுவதால் மின்உற்பத்தி பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கமளிக்கின்றனர். காந்தி நகர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், விஸ்கான்சின் பல்கலைக்கழகம் மற்றும் ட்யூக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. காந்தி நகர் இந்திய தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்களின் மீது படிந்துள்ள மாசுக்களை சுத்தம் செய்த பின்னர், மின் உற்பத்தி அளவு 50 சதவீத அளவு அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் அந்த பேனல்களை சுத்தம் செய்தாலும், மின் உற்பத்தி அளவு 17 முதல் 25 சதவீத அளவுக்கு குறைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதேநேரம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பேனல்களை சுத்தம் செய்தால், மின் உற்பத்தி இழப்பு 25 முதல் 35 சதவீதமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பால் மின் உற்பத்தி மட்டுமல்லாது பண விரயமும் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளார்கள். குறிப்பாக காற்று மாசுபாடு அதிகமுள்ள சீனா ஆண்டுதோறும் பல லட்சம் டாலர்களை இழப்பதாகவும் அவர்கள் கணக்கிட்டுள்ளனர். காற்று மாசுபாடால் புவி வெப்பமடைவதுடன், பல்வேறு உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும் நிலையில், அதனால் சூரிய மின் உற்பத்தியும் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com