மோசடிகளால் ஆபத்து.. Whatsapp செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விதிகள் என்ன?
சிம்கார்டு ஆக்டிவ் ஆக இருந்தால்தான் அதனை வாட்ஸ் ஆப் செயலிக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றம் மேற்கொள்ளும்படி மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
சிம்கார்டு ஆக்டிவ் ஆக இருந்தால்தான் அதனை வாட்ஸ் ஆப் செயலிக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றம் மேற்கொள்ளும்படி மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 2025ஆம் ஆண்டின் புதிய தகவல் தொழில்நுட்ப சைபர்பாதுகாப்பு திருத்த விதிகளுக்கு இணங்கும் வகையில் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. புதிய விதிகள் என்ன என்பதை பார்க்கலாம்...
மொபைலில் ஒரு சிம் கார்டு பயன்படுத்தி வாட்ஸ் ஆப் செயலியை ஒருமுறை தரவிறக்கம் செய்துவிட்டால் போதுமானது. அந்த சிம்கார்டை மொபைலில் இருந்து அகற்றிவிட்டு வாட்ஸ் ஆப்பை மட்டும் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆக்டிவ் ஆக இல்லாத மொபைல் எண்ணை கொண்ட சிம்கார்டு மூலம் வாட்ஸ் ஆப் செயலியை ரிமோட் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்துகூடக் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
பணம் பறிக்கும் மோசடிக் கும்பல், சைபர் அரஸ்ட்டில் ஈடுபடும் கும்பல் ஆகியவையும் வாட்ஸ் ஆப், டெலிகிராம் போன்ற செயலிகளைத்தான் உபயோகிக்கின்றனர். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் எங்கிருந்து செயல்படுகின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியாததால் தப்பித்து விடுகின்றனர். 2025ஆம் ஆண்டின் புதிய தகவல் தொழில்நுட்ப சைபர் பாதுகாப்பு திருத்த விதிகளின்கீழ், தகவல் தொடர்பு அடையாளங்களை வெளிப்படுத்தும் பயனர் நிறுவனங்களாக வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, ஆக்டிவ் ஆக இல்லாத சிம்கார்டுகளுடன் வாட்ஸ் ஆப் செயலியை இணைப்பது, மடிக்கணினி உள்ளிட்டவற்றில் 6 மணிநேரத்துக்கும் அதிகமாக வாட்ஸ் ஆப் செயலியை லாக் இன் செய்வது ஆகியவற்றை தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
