“Time ஆயிடுச்சு தூங்க போங்க”! - இரவில் அதிகநேர பயன்பாட்டை குறைக்கும் வகையில் INSTA-ல் புதிய அப்டேட்!
சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாகிவிட்ட இன்றைய காலசூழலில், அடுத்த தலைமுறையினரான டீனேஜ் பயன்பாட்டாளர்கள் அதிக நேரத்தை சோஷியல் மீடியாவில் செலவிட்டு வருகின்றனர். அதிலும் இரவு நேரத்தில் அதிகநேரம் பயன்படுத்துவது, தூக்கிமின்மை என்பதோடு மட்டுமில்லாமல் தவறான பழக்கங்களுக்கும் ஆளாகிவிடுகின்றனர். இதனால் தங்களுடைய குழந்தைகளை சரியான வழியில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற கவலையில் பெற்றோர்கள் நைட் வாட்ச்மேன் அளவு தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டியுள்ளது.
இந்நிலையில் தான் பெற்றொர்களின் சுமையை குறைக்கும் வகையிலும், டீனேஜ் பயன்பாட்டாளர்களின் அதிகநேர பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையிலும் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யவிருக்கிறது.
Time for a break! It’s getting late!
டீனேஜ் பயன்பாட்டாளர்கள் இன்ஸ்டாகிராமை அதிகநேரம் பயன்படுத்துவதை குறைக்கும் வகையில், புதிய இரவுநேர நட்ஜ்கள் (nighttime nudges) என்ற அம்சத்தை ”இன்ஸ்டாகிராம்” அறிமுகப்படுத்துகிறது. அதன்படி பதின்வயதினர் இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் இன்ஸ்டா ரீல்ஸ், மெசெஞ்சர்கள் போன்ற இடங்களில் அதிக நேரம் செலவிட்டால், “இடைவெளிக்கான நேரம்” (Take a Break) மற்றும் “நிறுத்திக் கொள்வதற்கான நேரம்” (Quiet Mode) முதலிய இரவுநேர நட்ஜ்கள் ஸ்கிரீனில் தோன்றி தாமதமாகிவிட்டது என்பதை நினைவூட்டுவதோடு, ஆப்ஸை மூடிவிட்டு தூங்கச் செல்லும்படி அவர்களை ஊக்குவிக்கும்.
Take a Break - அம்சத்தின் படி பதின்வயதினர் இரவுநேரத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக பயன்படுத்தும் பட்சத்தில் “இடைவேளைக்கான நேரம்” என்ற அறிவிப்பை பார்க்கத் தொடங்குவார்கள். இதை அவர்களால் அணைத்து வைக்க முடியாது, ஆனால் தொடர்ச்சியாக ஆப்பை பயன்படுத்த முடியும். ஒருவேளை அதனைத்தொடர்ந்தும் தொடர்ச்சியாக பயன்படுத்துகிறார்கள் என்றால், “தாமதமாகிறது. இன்றைய இரவு இன்ஸ்டாகிராமை அனைத்து வைப்பதற்கான நேரம்” (It’s getting late. Consider closing Instagram for the night) என்ற நட்ஜ் தோன்றி அவர்களை மேலும் ஊக்குவிக்கும்.
Quiet Mode - குயிட் மோட் என்பது பதின்வயதினரை மற்ற பயன்பாட்டாளர்களிடமிருந்து தள்ளிவைப்பது. இந்த அம்சமானது, ”இந்த பயன்பாட்டாளர் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்புக்கு கிடைக்கமாட்டார் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்க உதவுகிறது”. இந்த அம்சத்தின் மூலம் மற்றவர்களிடமிருந்து வரும் அறிவிப்புகள் அனைத்தும் அணைக்கப்படுகின்றன.
டீனேஜ் பயன்பாட்டாளர்கள் தவறான வழிக்கு செல்வதை தடுப்பதே இலக்கு!
பதின்வயதினர், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மெட்டா நிறுவனம் சமீபத்தில் நிறைய அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பிட்ட 30க்கும் மேற்பட்ட குழுக்கள் மெட்டா நிறுவனம் குழந்தைகளை தவறான வழிக்கு செல்வதை அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இந்நிலையில் தான் டீனேஜ் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இத்தகைய புதிய அம்சங்களை கொண்டுவர மெட்டா நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.