வீணாகாத NASA-ன் 7 வருட காத்திருப்பு; பென்னு விண்கல் Sample-ஐ பூமிக்கு கொண்டுவந்த OSIRIS REx விண்கலம்

இந்த விண்கல் சோதனைக்காக 2016-ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக காத்திருந்த நாசா, பழமையான விண்கல் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து வரலாற்றில் ஒரு அசாத்தியமான நாளை கண்டுள்ளது.
OSIRIS REx with Asteroid Sample
OSIRIS REx with Asteroid SampleNASA

விண்வெளி ஆராய்சியாளர்கள் தொடர்ந்து விண்வெளியை ஆய்வு செய்து பல ஆராய்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதை தெரிந்துக்கொண்ட நாசா விஞ்ஞானிகள், அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பினர். அவர்கள் எதிர்பார்த்தப்படி அந்த விண்கலமானது விண்கல்லிருந்து சில பகுதிகளை மாதிரி எடுத்துக்கொண்டு பூமிக்கு வந்து இருக்கிறது.

விண்கல் பென்னு
விண்கல் பென்னுPT

இச்சோதனைக்காக 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நாசா ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி விண்கல்லை கண்காணிக்கத் தொடங்கியது. இந்த விண்கல்லிற்கு பென்னு என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.

ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தின் வேலை என்ன?

ஓசிரிஸ் ரெக்ஸின் திட்டமானது சிறு கோள்களை ஆய்வு செய்து அவற்றின் குறைந்தது 60 கிராம் மாதிரிகளையாவது சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இவ்வாறு செய்யப்படுகின்ற ஆராய்ச்சியில் சூரியக்குடும்பத்தின் தோற்றமும் அதன் பரிணாம வளர்ச்சியும், கோள் உருவாக்கம், புவியியல் உயிர்களின் தோற்றம் ஆகியவற்றை கரிமச்சேர்மங்களின் மூலம் ஆராய்ச்சியில் தெரியவரும் என்கிறார்கள்.

மாதிரியை கைப்பற்றி பூமியை நோக்கி புறப்பட்ட ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்!

இதற்காக அனுப்பப்பட்டது தான் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம். 2016ல் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 2 கோடி கி.மீ தூரம் பயணித்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பென்னு விண்கல்லை நெருங்கியது. அதன்பிறகு தொலைவில் இருந்தபடியே தொடர்ந்து பல மாதங்கள் பென்னுவை ஆய்வு செய்து வந்த ஓசிரிஸ்ரெக்ஸ், பென்னு விண்கல்லின் துகள்களை எடுப்பதற்கான இடத்தை தேர்வு செய்தது.

ஓசிரிஸ் ரெக்ஸின்
ஓசிரிஸ் ரெக்ஸின்

பின், பென்னுவின் அருகில் மிக நெருக்கமாகச் சென்று ஓசிரிஸ் ரெக்ஸ் தனது இயந்திர கைகளால், விண்கல்லில் உள்ள மாதிரிகளை கைப்பற்றி தன்னிடமிருந்த கேப்ஸ்யூலில் சேகரித்துக்கொண்டது. பிறகு தனது பணியை 2020ம் ஆண்டு நிறைவு செய்த ஓசிரிஸ் ரெக்ஸ் தான் சேகரித்த மாதிரியுடன் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது.

உட்டா பாலைவனத்தில் தரையிறங்கும் விண்கலம்!

இது வரும் செப்டம்பர் 24ம் தேதி பூமியை வந்தடையும் என கணித்திருக்கும் நாசா, இந்நிகழ்வை தனது வெப்சைட் மற்றும் யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டது. இந்த விண்கலமானது பூமியின் வளி மண்டலத்தை கடந்து பூமியை அடைந்தவுடன் விண்கலத்திலிருந்து கேப்ஸ்யூலானது பிரிந்து, வளிமண்டலத்தை தாண்டி பாராஷூட் மூலம் உட்டா பாலைவனத்தில் தரையிறங்க இருப்பதாகவும் தெரிவித்தது.

ஓசிரிஸ் ரெக்ஸின்
ஓசிரிஸ் ரெக்ஸின்

மேலும், இவ்வாறு அதிவேகமாக பாய்ந்து வரும் கேப்ஸ்யூல் பாராசூட் மூலம் படிப்படியாக வேகம் குறைந்து தரையில் விழுந்ததும் அதனை பாதுகாப்பாக ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும், கேப்ஸ்யூல் விழும் இடத்தை துல்லியமாக கண்டறிவதற்காக விமானப்படையினர் ரேடார் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள் எனவும் அறிவித்தது.

சொன்னது போலவே 24-ம் தேதியான இன்று தரையிறங்கிய விண்கலம்!

24-ம் தேதி பென்னு மாதிரியை சுமந்துவரும் கேப்ஸ்யூல் தரையிறங்கும் என கூறிய நிலையில், தற்போது அது வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியிருப்பதாகவும், அதனை கண்டுபிடித்துவிட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் நாசா, “கேப்ஸ்யூல் விழுந்த இடத்திற்கு சென்றுள்ள மீட்புக் குழு உறுப்பினர்கள் UTTR-ல் உள்ள தற்காலிக சுத்தமான அறைக்கு அதை வழங்குவதற்காக பென்னு விண்கல் மாதிரியை பேக் செய்கிறார்கள் என்றும், மற்றவர்கள் சாத்தியமான அசுத்தங்களை பட்டியலிட காற்று மற்றும் தரை அளவீடுகளை எடுக்கிறார்கள் என்றும்” பதிவிட்டுள்ளது.

மேலும் மாதிரியை தனியறைக்கு எடுத்துச்சென்றது வரை பதிவிட்டுவருகிறது. நாசா பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “மீதமுள்ள #OSIRISREx குழு மாதிரி அடங்கிய கேப்சூலுடன் திரும்பும் ஹெலிகாப்டரை உற்சாகமாக வரவேற்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பூமியை விட்டு வெளியேறி வீடு திரும்பிய காப்ஸ்யூலை காணும் எங்கள் முதல் பார்வை இதுவாகும்.

ஆனால் தற்போது அதற்குள்ளே பழமையான சிறுகோளின் பொருளும் உள்ளதை நம்பமுடியவில்லை. நான் அழவில்லை, நீங்கள் அழுகிறீர்களா” என சாதிக்க முடியாத ஒன்றை சாதித்த திருப்தியில் எமோசனலாக பதிவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com