வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக, கடலில் நீர்மட்டம் உயர்ந்தால் இந்தியாவின் மும்பை, மங்களூரு, காக்கிநாடா உட்பட 293 துறைமுக நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' விஞ்ஞானிகள், கடல் நீர்மட்டம் உயர்வதன் காரணமாக மூழ்கும் அபாயம் உள்ள துறைமுக நகரங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
அதில், அண்டார்டிகா பனிமலைகள், வெப்பத் தாக்கம் காரணமாக உருகத் தொடங்கியுள்ளன. இதனால், கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், இந்தியாவில் மும்பை, கர்நாடகாவில் உள்ள மங்களூரு, ஆந்திராவில் உள்ள காக்கி நாடா உட்பட 293 துறைமுக நகரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதில் மங்களூர், மும்பை நகரங்களுக்கு அதிக ஆபத்து. முதலில் மூழ்கும் நகரங்களாக இவை உள்ளன’ என்றும் கூறப்பட்டுள்ளது.