
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதையடுத்து அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த மாற்றம் பல்வேறு புதுசெயலிகள் உருவாக வழிவகுத்தது. அப்படி உருவான பல செயலிகளில் முக்கியமானதாக அமைந்தது மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் செயலி.
பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் இந்த த்ரெட்ஸ் செயலி, பிற செயலிகளைப் போல Basic Information கேட்கப்பட்டு கணக்கு தொடங்க முடியாது. மாறாக இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் த்ரெட்ஸ் கணக்கை தொடங்க வேண்டும். இந்த த்ரெட்ஸின் ஸ்மார்ட் ட்ரிக்ஸை பார்ப்போம்...
# ஸ்மார்ட் போனை கையில் எடுத்து உபயோகிக்க ஆரம்பித்தால் நம்மில் பலருக்கும் நேரம் செல்வதே தெரியாது. ஆனால் த்ரெட்ஸில் இப்பிரச்னை உங்களுக்கு இருக்காது. ஏனெனில் இச்செயலி உபயோகிப்பதில் இருந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்றால் இதை பயன்படுத்த தொடங்கும் போதே Setting > Account> Take a Break என்பதற்கு சென்று ஓய்வெடுப்பதற்கான நினைவூட்டல் விருப்பத்தை நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம். அந்த நேரம் வந்தவுடன் நோட்டிஃபிகேஷன் வந்துவிடும். அதைப்பார்த்துவிட்டு வெளியே வருவது, உங்க கையில் தான் இருக்கு!
# நம்மில் பலருக்கும் கவனச் சிதறல் இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு செயலியில் எதாவது பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு செயலியில் இருந்து நோட்டிபிகேஷன் வந்தால், நாம் என்ன செய்ய இந்த செயலிக்குள் வந்தோம் என்பதையே மறந்துவிடுவோம். இத்தகைய பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, Notification-களை நிர்வகிப்பதற்கான தேர்வு த்ரெட்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி த்ரெட்ஸ் பயன்படுத்தும்போது நாமே Notifications-ஐ கட்டுப்படுத்த, Settings > Notifications > Pause all என்பதை தேர்வுசெய்யவும்.
# சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, எதிர்வினைகளும் அதிகரிக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் பல நேரத்தில் இடுகைகளுக்கு வரும் கமெண்ட்கள், முகச்சுளிப்புக்கு வழிவகுக்கும். இதை த்ரெடிஸில் நாமே கையாளலாம். இதற்கு Settings>Privacy > Hidden words என்பதைத் தேர்வு செய்துகொண்டு, அதில் Offensive words and Phrases, Custom words and Phrases என்பதை தேர்வு செய்தால் போதும். அந்த வார்த்தைகளை தவிர்க்கலாம்.
# நீங்கள் போடும் போஸ்ட்டை யார் பார்க்க வேண்டும், யாருக்கு மறைக்க வேண்டும், வருங்காலத்தில் அழிக்கப்பட வேண்டுமா என்ற தேர்வுகளெல்லாம் த்ரெட்ஸில் அடங்கியுள்ளன. அதற்கு இடுகையின் மேல் உள்ள மூன்று புள்ளிகள் உள்ள ஐகானைக் கிளிக்செய்து, ஒரே கிளிக்கில் Mute, Hide அல்லது Report-ஐ தேர்ந்தெடுக்கலாம்.
# த்ரெட்ஸில் நாம் கொடுக்கும் சுயவிவரம் முதலில் Public ஆப்ஷனாகத்தான் இருக்கும். அதனை தனிப்பட்டதாக மாற்றி, உங்களை பின்தொடர்பவர்கள் மட்டும் உங்களின் தனிப்பட்ட இடுகைகளையும், மற்ற விவரங்களையும் காண செய்ய settings> privacy> private profile option என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதைப்போல வரும் நாட்களில் த்ரெட்ஸில் இன்னும் பல புதுமைகள் வரலாம்... பார்ப்போம்!